மதுரை: தவெக அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்த நிலையில், பயிர் கடன்களை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். தவெக ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி என்றும் தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின் முதலில் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75 ஆயிரத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தவெக அரசு அறிவித்தது.
இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடிக்கான பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாக பயிர் கடனை ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து புதுவிதமான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை கிழக்கு தாலுகா பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற பெரும்பாலான விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நோட்டீசில், ‘‘இச்சங்கத்தில் தாங்கள் பெற்ற பயிர் கடன் தொகையினை கடந்த ஜூன் 19ம் தேதி முதல் டிஎன்ஜிசிஏ பகுப்பாய்விற்கு பின்னர் தகுதியானோர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு தள்ளுபடி தொகை விடுவிக்கப்படும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்தில் தவணை தவறிய கடன்களாக மாறும் சூழல் உள்ளது.
எனவே, தாங்கள் பெற்ற கடன் தொகையினை தவணை தவறும் தேதிக்கு முன் செலுத்த தெரிவிக்கப்படுகிறது. தள்ளுபடி தொகை பட்டியல் இறுதி செய்யப்பட்டு சங்கத்திற்கு விடுவிக்கும் போது தங்கள் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கடன் தொகை என்பதில் இந்த காலத்திற்குரிய வட்டியும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
பயிர் கடன் ரத்து தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கடன் தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்றும், பின்னர் வங்கி கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படும் என கூறி நோட்டீஸ் கொடுத்துள்ளதால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து கள்ளந்திரி வட்டார விவசாயிகள் கூறுகையில், ‘‘முதலில் முழு கடன் தொகையையும் செலுத்தினால் மட்டுமே தள்ளுபடி என்றும், பின்னர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி முழு தொகையையும் கட்டுமாறு வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
ஏற்கனவே ரூ.75 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி அறிவிப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முதிர்வடைந்த கடன்களுக்கு வங்கிகள் முழு தொகையை வசூலிக்க நோட்டீஸ் வழங்கி வருவது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தள்ளுபடி நடைமுறை குறித்து அரசு உடனடியாக தெளிவான விளக்கம் அளித்து அதுவரை முதிர்வடைந்த பயிர் கடன்களுக்கான கட்டாய வசூல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்’’ என்றார்.
