சென்னை: தென்மேற்கு பருவமழை குறைந்த மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் இதர அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.முதல்வர் விஜய் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வு கூட்டம் நடந்தது. குறுவை தொகுப்பு திட்டத்தினை 15.8.2026க்குள் வழங்கி முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இப்பணியினை வேளாண்மை துறை விரைந்து முடித்திட முதல்வர் அறிவுறுத்தினார். வறட்சியான சூழல் நிலவி வருவதால் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் வட்டார அளவில் சேமித்து வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளை துரிதமாக செயல்படுத்திட, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்திட ரூ.330 கோடியும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் – மீனவர் நலத்துறைக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தின் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் உரிய மாவட்டங்களுக்கு சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை, குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வினோத், மரிய வில்சன், தலைமை செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை செயலாளர் சித்திக், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வள துறை செயலாளர் அனு ஜார்ஜ், வேளாண்மை உற்பத்தி ஆணையர் சங்கர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் பிரசாந்த் வடநெரே, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்த், பேரிடர் மேலாண்மை ஆணையர் சிவஞானம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
