நாகர்கோவில் : குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த சபரிவர்மன் (34) என்ற மாற்று திறனாளி வியாபாரி, நாகர்கோவில் சிறைக்குள் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சிறை வார்டன் ெஜகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர வெவ்வேறு வழக்குகளில் கைதாகி நாகர்கோவில் சிறைக்குள் இருந்த 8 கைதிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், சிபிசிஐடி எஸ்.பி. ஷாஜிதா நாகர்கோவில் சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர் தவிர மேலும் சிலர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிறையில் பதிவேடு குளறுபடி இருப்பது வெளியானது.
இது மட்டுமின்றி, சபரிவர்மனின் கை, கால்களை லுங்கியால் கட்டி வைத்து தாக்கி இருப்பதும் தெரிய வந்தது. தன்னை போலீசார் ஏமாற்றி அழைத்து வந்து கைது செய்து விட்டனர். மனைவி, பிள்ளைகளை பார்க்க வேண்டும் என சபரிவர்மன் தொடர்ந்து கூச்சலிட்டு இருந்துள்ளார். இது மற்ற கைதிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் சிறை வார்டன்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து 2 நாட்கள் சபரிவர்மன் சாப்பிடாமலும் இருந்துள்ளார். ஆனால் சிறை அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நாகர்கோவில் சிறையில் துணை சூப்பிரெண்ட் ஆக இருந்த சம்பத், பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளார். கைதாகி சிறையில் உள்ள வார்டன் உள்பட 3 பேருக்கு பதிலாக பாளையங்கோட்டையில் இருந்து புதிய சிறைத்துறை ஊழியர்கள் நாகர்கோவில் சிறைக்கு வந்துள்ளனர்.
