சென்னை: காவிரி பிரச்னை உச்சக்கட்ட நிலையில் இருக்கும் நேரத்தில் சென்னை வரும் ராகுல்காந்தி மற்றும் முதல்வர் விஜய் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. தமிழகத்திலும் கர்நா டகத்திலும் இதையொட்டி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வருகிறார்.
இந்த பயணத்தின் போது, தமிழக முதல்வர் விஜய்யை ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று சொல்லப்பட்டது. இருவரும் நேரில் சந்திக்கும் பட்சத்தில் காவிரி நீர் விவகாரம் குறித்து கண்டிப்பாக பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படும். காவிரி நீர் விவகாரத்தில் ராகுல்காந்தியின் நிலைப்பாடு என்ன, அவர் தமிழக உரிமைகளுக்காக பரிந்து பேசுவாரா என்ற கேள்வியை தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் எழுப்பி வருகின்றனர். எனவே தான் ராகுல்காந்தி- முதல்வர் விஜய் சந்திப்பு என்பது இருக்க வாய்ப்பில்ைல என்றே காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயிற்சி முகாமில் பங்கேற்க மட்டுமே அவர் வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதனால் தான், காவிரி நீர் பிரச்னை, மேகதாது பிரச்னை என கர்நாக அரசுடன் தமிழகம் மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், இருவரது சந்திப்பு என்பது நடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு உள்ளது. 2028ம் ஆண்டு அம்மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக காவிரியில் கர்நாடகத்தின் பக்கம் ராகுல்காந்தி நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விஜய் சந்திப்பு நடந்தால், காவிரியில் தமிழகத்துக்கு ஆதரவாக இருவரும் ஏன் பேசவில்லை என்ற கேள்வி எழும். இதனால் தான் இருவரும் சந்திப்பை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவு தெரிவிக்காத ராகுல் காந்தியை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாமல்லபுரம் செல்லும் வழியில் அவருக்கு கருப்பு கொடி காட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடும் என்றும் தகவல் ளெவியாகியுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
