காரைக்குடியில் ரூ.100 கோடி கோயில் நிலம் மோசடி கோயில் நிலங்களுக்கு தாசில்தார்கள் தடையில்லா சான்று வழங்கக்கூடாது: சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: காரைக்குடியில் ரூ.100 கோடி கோயில் நிலம் மோசடி தொடர்பான வழக்கில், கோயில் நிலங்களுக்கு இனி தாசில்தார்கள் தடையின்மை சான்று வழங்கக் கூடாது என சுற்றறிக்கை வழங்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த பழனியப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி நகரில் இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக காரைக்குடி நகர் பகுதியில் பல ஏக்கர் நிலங்கள் உள்ளன.

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே முடியரசன் சாலையில் 2 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி. இதனை தனிநபர் ஒருவர், கடந்த 1975ல் கோயில் டிரஸ்டியாக இருந்தவர் எழுதி கொடுத்தது போல் போலி கையெழுத்து போட்டு ஆவணம் தயார் செய்து கோயில் டிரஸ்டிகளை ஒரு தரப்பாக சேர்க்காமல் 2011ல் அவரது தந்தை பெயரில் நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளனர். அதன் மூலம் அந்த தனிநபர் அவரது மனைவி பெயருக்கு தானம் செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கடந்த ஜூன் மாதம் இந்த நிலங்களுக்கு பட்டா மறுதல் செய்ய மனு அளித்துள்ளனர். இதற்காக கோயில் நிலங்களுக்கு என உள்ள சிறப்பு தாசில்தார் மகாதேவனிடம் தடையில்லா சான்று பெற்று, மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் பட்டா மாறுதல் செய்துள்ளனர். எனவே, சட்ட விரோதமாக கோயில் நிலங்களை பட்டா மாறுதல் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் நேற்று விசரனைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.சரவணன் ஆஜராகி, ‘‘சம்பந்தப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு விட்டது. கிராம வருவாய் கணக்கில் மீண்டும் கோயில் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது’’ என்றார். மனுதாரர் தரப்பில், ‘‘திருக்கோயில் நிலங்களை பாதுகாப்பதற்காகவே தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் வேலியே பயிரை மேய்வது போல கோயில் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியே தடையின்மை சான்று வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே பட்டா மாறுதலை ரத்து செய்து சம்பந்தப்பட்ட தாசில்தார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘‘கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியர் மகாதேவன் செயலுக்கு கடும் கண்டனத்திற்கு உரியது. சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் நிலங்கள் குறித்து வழங்கிய தடையின்மை சான்று மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட பட்டாவை அரசு ரத்து செய்துள்ளது.

எனவே, இதைப்போல வேறு ஏதேனும் கோயில் நிலங்களுக்கு தடையின்மை சான்று வழங்கியிருந்தால் அதனையும், இந்த உத்தரவின் மூலமாக உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. அறநிலையத்துறை ஆணையர் இனிமேல் இதுபோன்று தவறுகள் நடக்காத வகையில், தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோயில் நிலங்களுக்கு என நியமிக்கப்பட்ட தனி தாசில்தார்கள் தடையின்மை சான்று வழங்கக் கூடாது என உரிய சுற்றறிக்கைகள் பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Related Stories: