உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமன பட்டியல் தவெக வழக்கறிஞர்கள் அணியினர் பெயர் இருட்டடிப்பு: பதவி கிடைக்காததால் அதிருப்தி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அரசு தரப்பில் ஆஜராவதற்கான வழக்கறிஞர் பட்டியல் வெளிவந்துள்ளது. கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பி.வி.பாலசுப்பிரமணியம், டி.கவுதமன் உள்ளிட்ட 8 பேர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மாநில அரசு பிளீடராக எம்.குரு பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றத்திற்கு 23 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 30 அரசு கூடுதல் பிளீடர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 60 அரசு வழக்கறிஞர்கள் (சிவில்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கறிஞர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்களில் பலர் தவெக வழக்கறிஞர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களின் வேட்பு மனுக்களில் பிரச்னை ஏற்பட்டபோது ஓடிப்போய சட்ட ரீதியான பிரச்னைகளை தீர்த்துவைத்த மற்றும் ஒரு முக்கியமான நபரின் பெயரும் பட்டியலில் இல்லை. தவெக வழக்கறிஞர்கள் அணியில் உள்ள அனுபவம் உள்ள வழக்கறிஞர்களுக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

அரசு வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பித்த பலருக்கு போலீஸ் வெரிபிகேஷனும் நடந்துள்ளது. அவர்களுக்கு கூட வாய்ப்பு தரப்படவில்லை. தங்களுக்கு எப்படியும் அரசு வழக்கறிஞர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் தவெகவில் இணைந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

இதற்கிடையே கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல் கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தனர். அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.ஆளும் கட்சியை சேர்ந்தவர் அரசு வழக்கறிஞராக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குகளில் அரசுக்கு எதிரான நிலை உருவாகும்போது அரசை காப்பாற்ற போராடுவார்கள். ஆனால், தற்போதைய நிலைமை மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Related Stories: