ஜனநாயகன் பட டைட்டிலில் முதல்வர் என போடுவதா? காசி முத்துமாணிக்கம் கண்டனம்

சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆர். 1977 ஜூன் 30ல் முதல்வரானார். அதன்பின் ‘மீனவ நண்பன்’, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வெளிவந்தது. இரண்டு படங்களிலும் டைட்டிலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் என்றுதான் வந்தது. முதல்வர் என்றோ புரட்சித்தலைவர் என்றோ வரவில்லை. கலைஞரின் திரைக்கதை வசனத்தில் பல படங்கள் வந்தன. ஆனால் முதல்வர் என போட்டதில்லை. கலைஞர் மு.கருணாநிதி என போட்டுதான் வந்தது.

காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்கிறாராம். கலைஞரால் சூட்டப்பட்ட விமான நிலையத்தில் இருந்த காமராஜர் பெயரை எடுத்து, அதற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் பெயர் வைக்க வேண்டும் என குரல் கொடுத்த செங்கோட்டையன், ஜே.சி.டி.பிரபாகர் போன்றோரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, சம்பந்தம் இல்லாமல் பெயர் வைத்து அள்ளி ஊற்றுகிறார். அப்படி என்ன முதல்வர் என்கிற பெயரில் விஜய்க்கு வெறுப்போ தெரியவில்லை. ஒருவேளை முதல்வர் என்று எழுதினாலே, கார்பனுக்கு கீழே மு.க.ஸ்டாலின் என்று தான் வருகிறதோ, தெரியவில்லை.

நான் முதல்வன் என்றால் முதல்வனை எடுக்கிறார். முதல்வர் காலை உணவு திட்டம் என்றால் முதல்வரை எடுத்துவிட்டு காமராஜர் என்று பெயர் வைத்துள்ளார். பண்பாட்டின் சிகரமான தளபதி, அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. தன் தந்தையின் சிந்தனையில் உருவான புதிய தலைமைச் செயலகத்தை, செம்மொழி பூங்காவை, அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அ.தி.மு.க.வினர் சிதைக்கும்போதே அவர்களது நாகரிகம் அவ்வளவு தான் என அமைதியாக கடந்துவிட்டார்.

மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்ந்த உடன் மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக தளபதி மாற்ற வில்லை. அம்மா உணவகம் பெயர் மாற்றப்படவில்லை. பள்ளிக்கூட புத்தகப்பையிலிருந்த ஜெயலலிதா – எடப்பாடி பழனிசாமி படத்தைக் கூட இரண்டு ஆண்டாக மாற்றவில்லை. இவைகளுக்கான புதிய செலவுத் தொகையை கொரோனாவுக்கு நிதியாக மடை மாற்றினார். திமுக கொரோனாவுக்கு குடும்பத்திற்கு ரூ.5,000 கொடுக்கச் சொன்னபோது, எடப்பாடி ரூ.1,000 மட்டும் தான் கொடுத்தார்.

தளபதி வந்தவுடன் ரூ.4,000 கொடுத்து மக்களின் குறையைப் போக்கினார். இப்போது கூட ஆட்சிக்கு தி.மு.க. வந்திருந்தால் மகளிர்க்கு மாதம் ரூ.2,000 உடனே கொடுத்திருப்பார். ஏன் பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட சாமான்கள் வாங்கிட உதவியாக தலா ரூ.8,000 கொடுத்திருப்பார். எங்கே நிதியை திரட்டி, எங்கே மக்கள் நலத்திட்டத்திற்கு மாற்றலாம் என்கிற அனுபவம் அறிவு தந்தையிடம் கற்ற அறிவு உண்டு தளபதிக்கு.

ஆனால், விஜய் ரூ.2,500 தருவதற்கு, வேலையில்லா பட்டதாரி மாணவர்களுக்கு ரூ.4,000, முதியோர் பென்ஷன் ரூ.3,000, பெண்கள் திருமணத்திற்கு ஒரு பவுன் மற்றும் பட்டுப்புடவை, அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.12,000 வழங்குவதற்கு என எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு சதவீத முயற்சி கூட அக்கறை காட்டவில்லை. இப்போது கூட நீ என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள். நான் வரும்போது மாற்றுவேன் என்று தளபதி ஸ்டாலின் கூறவே இல்லை.

உத்தரபிரதேசத்தில் மாயாவதி இப்படித்தான் திட்டங்களுக்கும், சாலைகளுக்கும் பெயர்களை மாற்றினார். யானை சிலைகளை பூங்காவிலும், சாலையிலும் என உருவாக்கினார். அந்த தேர்தலோடு வீட்டுக்கு அனுப்பப்பட்டார் மாயாவதி. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். பா.ஜ.வின் தூண்டுதலில், சினிமா கிளுகிளுப்பில் தி.மு.க. ஆட்சி அகன்றது.

கொள்கை சீற்றத்தால் மாணவர் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் பா.ஜ. அமைச்சர் அவையிலிருந்து அகற்றம் இன்று. பா.ஜ.வின் வீழ்ச்சிக்கு பிரதான் முதல் அடி இனி தொடர் அடி அது ஆஞ்சநேயர் வால் போல் நீண்டு கொண்டிருக்கும். தர்மேந்திர பிரதான் விலகலுடன் நம் சிந்தனை, செயல் முடிவுக்கு வந்து விடாது. நீட்டையே அகற்ற வேண்டும் என்பதுதான் தளபதி முழக்கம்.

நாடாளுமன்றத்தில் தமிழ்மொழிக்கு நாம் போராடிய போது, இன்று ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றார். தமிழர்களின் சாபம் அமைச்சர் பதவியை இழந்து நிற்கிறார். நாளை தர்மேந்திர பிரதான் போல இன்னொரு பிரதான் வரலாம். ஆதலால் நீட்டையே விரட்ட வேண்டும் என்பது தான் திமுகவின் வலியுறுத்தல். பெண்கள் கல்வியில் 42% முன்னேறிய தமிழ்நாடு, ஜனநாயகன் படத்தை கொண்டாடுவது என்பதையும் மீறி தமிழர்கள் தைரியமாக நின்று போராடினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கல்லூரி புகுந்து, மாணவர்களின் விடுதிக்குள் சென்று கைது செய்து, அடித்து விரட்டி ஓட விட்ட காவல்துறை செயல் கண்டிக்கத்தக்கது. மெரினாவையே பூட்டியது த.வெ.க.வின் காவல்துறை ஒருபுறம், மறுபுறம் புகழ் தி.மு.க.விற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மாணவர்கள் போராட்டத்திற்கு த.வெ.க.வின் நடிகை சனம் ஷெட்டி போன்றோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆனால் பேசுபொருளான நீட்டினை பேசாது, ஜனநாயகன் படப்புகழை மட்டுமே பேசினர். கொந்தளித்தது ஜனம், அதனால் ஒலிபெருக்கி பிடுங்கப்பட்டு விரட்டப்பட்டார். அமைச் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த விவகாரத்தில் இதுவரை ஆதரித்தோ, எதிர்த்தோ த.வெ.க. கருத்து கூட கூறவில்லை. ஏன் இந்த இரட்டை வேடம் த.வெ.க. போடுகிறது?. நீட்டின் தொடக்கம் முதல் இன்று வரை தி.மு.க. எதிர்ப்புடன் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: