தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் என மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு:“த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்…முதலில் மின்வெட்டுப் பிரச்னை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்த குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சார பயன்பாட்டை கணக்கெடுக்கும் ரீடிங் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.”

* ‘புத்தகம் வழங்க தயார்’

‘‘கற்றனைத்து ஊறும் அறிவு. 2018ல் திமுக தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்கு பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுவரை இப்படி பெறப்பட்ட 6 லட்சம் நூல்களை தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று (நேற்று) வழங்கினேன். புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்க தயாராக இருக்கிறோம். வாசிப்பு பெருகினால் தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: