3.5 லட்சம் மின் இணைப்புகள் மறுமதீப்பீடு; மின் கட்டண உயர்வு குறித்து புகார் எதுவும் வரவில்லை: பொதுமக்களை பார்த்து கிண்டலடிக்கும் அமைச்சர் நிர்மல்குமார்

 

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களை சந்தித்து பேசியதாவது: மின் கட்டண உயர்வு சம்பந்தமாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் வந்த தவறான தகவலை நம்பி அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு 2 முதல் 3 மடங்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. இதுகுறித்து புகார்கள் எதுவும் வரவில்லை. மின்கட்டணத்தில் மாறுபாடுகள் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளில் மறுமதிப்பீடு நடைபெற்று வருகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிப்புகள் வெளியிடப்படும். உச்ச நீதிமன்றத்தை நாடுவது, காவிரி நடுவர் மன்றம் அமைப்பது, மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையின் மூலம் காவிரி நதிநீரை பெறுவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது இந்த நான்கு வழிகளை பயன்படுத்தி காவிரி நீரை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முதல்வர் செய்வார். மின் கட்டணம் உயர்வு குறித்து மறுமதிப்பீடு நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் என்ன சிக்கல் உள்ளது என்பதை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் முக்கால்வாசி பேர், மின் கட்டண உயர்வால் அவதிப்பட்டு வருகின்றனர். அதை பலர் வீடியோவாகவும் போட்டு வருகின்றனர். பலர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் புகாரே வரவில்லை என்று பொதுமக்களை ஏளனமான வகையில் பேசுவது பொதுமக்களை மிகவும் பாதித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

* 3.70 லட்சம் வீடுகளில் மறுஆய்வு செய்ய சுற்றறிக்கை

கடந்த ஜூலை மாதம் அதிக மின் கட்டணம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ள புகார்களை தொடர்ந்து, அதிக மின் நுகர்வு பதிவான வீட்டு மின் இணைப்புகளை மூத்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் ராய் அனுப்பிய சுற்றறிக்கை : ஜூலை மாதம் அதிக மின் நுகர்வு பதிவான 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மதிப்பீட்டு அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர்.

ஜூலை மாத மின் நுகர்வு, முந்தைய மே மாத மின் நுகர்வுடன் ஒப்பிட்டு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள இணைப்புகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. ஆய்வின்போது பில் கணக்கீடு அல்லது மீட்டர் பதிவு தொடர்பாக ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக உரிய திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: