சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்குரிய அடிப்படை ஆதாரத்தின் அடிப்படையில் கடந்த 28ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகம் வழக்கு பதிவு செய்து, முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், பாஸ்கர், நேர்முக உதவியாளர் ரத்தேஷ் மற்றும் கார்த்திக், தனி நபர்கள் மற்றும் மதுபான உற்பத்தி ஆலை, சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிற டாஸ்மாக் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் புலனாய்வின் தொடர்ச்சியாக இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர் ரமேஷ் ஆகிய இருவரும் 30ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
