கோவில்பட்டி, ஜூன் 16: கோவில்பட்டி அருகே மு.கோட்டூர் அரசு பள்ளியில் பாழடைந்த வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவில்பட்டி கல்வி மாவட்டம் மு.கோட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய முதல்வர் காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 20 மாணவர்களும், பின்னர் படிப்படியாக 160 மாணவர்களும் பயின்றனர். மு.கோட்டூரை சுற்றி சுமார் 10 கிமீ சுற்றளவில் உயர்நிலைப்பள்ளி கிடையாது. மிகவும் பின் தங்கிய பகுதியான முத்துலாபுரத்தின் சுற்றுவட்டார கிராமப்புற அடித்தட்டு நிலை மாணவ -மாணவியர் உயர் நிலைக்கல்வி பயில இப்பள்ளி பெரும் உதவியாக இருந்து வருகிறது.
இங்கு பயின்ற பலர் வெளிநாடுகளிலும் மற்றும் இந்திய அளவில் உயரிய பதவியிலும், தொழிலதிபர்களாவும் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் பள்ளிகள் அதிகளவில் திறக்கப்பட்டு இருப்பிடத்திற்கே வந்து மாணவர்களை அழைத்து செல்கின்றன. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இருப்பினும் மு.கோட்டூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்திற்குள் வகுப்பறை கட்டிடத்தின் அருகே சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் மிகவும் மோசமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாழடைந்த வகுப்பறை அருகே ஆபத்தை உணராமல் மாணவ- மாணவியர் விளையாடுவதால் ஏதாவது அசம்பாவிதம் நேரிடும் முன் உடனடியாக கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். மேலும் இப்பள்ளியில் மாணவ- மாணவியருக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
இதனால் குடிநீர் கிடைக்காமல் தினமும் சிரமப்படுகின்றனர். பழமையான இப்பள்ளிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து கிராமப்புற மாணவர்களுக்கு உதவிட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திட வேண்டும். பாழடைந்த பள்ளி வகுப்பறை கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
