பேராவூரணி, ஜூன் 16: பேராவூரணியில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாத இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பள்ளி முடிவடையும் மாலை நேரங்களில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக வாகனங்களில் செல்வதும், மாணவிகளை கிண்டல் செய்வதும் நடப்பதால் போலீசார் பள்ளி விடுகின்ற மாலை நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையில், ஏட்டுகள் வெங்கடேசன், ராஜா, கதிரவன் உள்ளிட்டோர் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மண் ஏற்றி வந்த டிராக்டர்கள், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளனவா என சோதனை மேற்கொண்டனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியவர்கள், மூன்று பேராக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்கள், உரிய வயது அடையாதவர்கள், லைசன்ஸ் இல்லாதவர்கள் வாகனங்களை இயக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரப்படும் என போலீசார் தெரிவித்தனர் . பள்ளி விடும் நேரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சோதனை மேற்க்கொள்வதோடு, போக்குவரத்தை ஒழுங்கு செய்வதை பொதுமக்கள் பாராட்டினர்.
