விசில் அடித்து ஆட்சிக்கு வந்தவர்களுக்கு கேட்கிறதா என தவெக அரசுக்கு எதிராக விசில் அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்: வாக்குறுதி கொடுத்து மோசடி செய்வதாக குற்றச்சாட்டு

 

திருவண்ணாமலை, ஜூன் 16: விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விசில் அடித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில், 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு அரசு வெளியிட்ட பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ரூ.50 ஆயிரம் வரை கடன் இருந்தால் குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி எனவும், ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக கடன் இருந்தால் வெறும் ரூ.5 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி எனவும் தெரிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், தமிழக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். அப்போது, விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்து தவெக அரசு மோசடி செய்வதாக குற்றம் சாட்டினர். தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தள்ளுபடி செய்யாமல் நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறது எனவும், விவசாயிகளை ஏமாற்றாதே, விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே எனவும் கண்டன முழக்கமிட்டனர். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், கரும்புக்கான ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதோடு, விசில் அடித்து ஆட்சிக்கு வந்தவர்களுக்கு, விசில் அடித்து சொன்னாலாவது விவசாயிகளின் குரல் கேட்கிறதா என முழுக்கமிட்ட, விவசாயிகள் அனைவரும் விசில் அடித்தபடி தங்கள் எதிர்ப்பை, கண்டனத்தை நூதன முறையில் வெளிபடுத்தினர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி கூறுகையில், ‘விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். கோட்டையை நோக்கி சென்று, முதல்வரைத்தான் கேள்வி கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை, யாரும் எங்கும் போராடவில்லை என புதியதாக வந்துள்ள அமைச்சர் உண்மை நிலை தெரியாமல் பொய்யான தகவல் சொல்வது வெட்கக்கேடானது என்றார். அதைத்தொடர்ந்து, தங்களுடைய கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வந்தனா கார்க்கிடம் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அளித்தனர்.

Related Stories: