வந்தவாசி, ஜூன் 16: வந்தவாசி அருகே மொபட்டில் சென்ற பெண் சத்துணவு அமைப்பாளரிடம் பைக்கில் வந்த ஹெல்மெட் ஆசாமி தங்க சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு தேவராஜ். இவரது மனைவி நதியா(40) வல்லம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர் நேற்று பெரணமல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல தனது மொபட்டில் பிற்பகல் 3 மணி அளவில் வல்லம் கிராமத்திலிருந்து சென்றார். வல்லம் தாடிநொளம்பை நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் சாலையோரம் பைக்கை நிறுத்தி அங்கு நின்றுகொண்டிருந்த கணவரிடம் பேசிக்ெகாண்டிருந்தாராம். அப்ேபாது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து பின்தொடர்ந்து வந்த ஆசாமி கண்ணிமைக்கும் நேரத்தில் நதியா அணிந்திருந்த 3 அரை சவரன் தங்க செயினை அறுத்தார். அப்போது நதியா செயினை இறுக்கி பிடித்துக்கொண்டதால் ஒரு சவரன் நதியா கையில் சிக்கியது. மீதம் இருந்த இரண்டரை சவரன் தங்க நகையை மர்ம ஆசாமி பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமானார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த வந்தவாசி டிஎஸ்பி சதீஷ்குமார் வடவணக்கம்பாடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ரமேஷ், தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் செயினை பறித்து பைக்கில் தப்பியவர் தாடிநொளம்பை வழியாகத்தான் சென்று இருக்கலாம் என கருதி போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் வாகனம் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பட்டப்பகலில் சத்துணவு அமைப்பாளரிடம் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
