மன்னார்குடி அடுத்த சவளக்காரன் ரேஷன் கடையில் தீ விபத்து

 

மன்னார்குடி, ஜூன் 16: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சவளக்காரன் கிராமத்தில் முழு நேர ரேஷன் கடை உள்ளது. இங்கு 780 குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் மன்னார்குடி வானக்காரத் தெருவை சேர்ந்த வினோத் (38) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை ரேஷன் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மன்னார்குடியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த ஆவணங்கள், மேஜை, நாற்காலிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கோணி பைகள் ஆகியவை எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தகவல் அறிந்து மன்னார்குடி தாலுகா இன்ஸ்பெக்டர் (பொ) ராஜ்கமல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தஞ்சை யில் இருந்து தடய நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து, மன்னார்குடி வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்க மேலான்மை இயக்குனர் அருள்குமார், கூட்டுறவு சார் பதிவாளர் சக்திவேல், மேலாளர் அண்ணாதுரை ஆகியோர் தீவிபத்து நடந்த ரேஷன் கடையை பார்வையிட்டனர். இந்த தீவிபத்து தொடர்பாக கடையின் விற்பனையாளர் வினோத் என்பவர் மன்னார்குடி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிபத்துக்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு சதி வேலை காரணமா என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: