திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்களுக்கு தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

திருவாரூர், ஜூன் 16: திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் திட்ட பணிகளுக்கு தற்காலிகமாக பணியாற்றிட தகுதியுடையவர்கள் வரும் 29ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை முழுமையாக்கும் திட்டப் பணியின் 2ம் கட்ட செயல்பாடுகள் மேலும் 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு இதற்காக தற்காலிகமாக பணிபுரிய மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மாநில வள பயிற்றுநர் 3 மாவட்டத்திற்கு ஒருவர் என பின்னர் தேர்வு செய்யப்படுவர். மதிப்பூதியம், கண்காணிப்பு, மேற்பார்வை, ஆவணப்படுத்துதல் மற்றும் பயணப்படி ஆகியவவை சேர்த்து ரூ.25 ஆயிரம் அதிகபட்சமாக வழங்கப்படும். பெண்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை தரப்படும். கல்வித்தகுதி -சமூக கல்வி, சமூக அறிவியல், ஊரக வளர்ச்சி, பெண்கள் கல்வி அல்லது சமூக பணியிடங்களில் ஏதேனும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 1.6.2026 அன்று 30-முதல் 45க்குள் இருக்க வேண்டும். அனுபவம் 10 ஆண்டுகள், சுயஉதவிக்குழு கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம், சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரக பணிகளில் பணியாற்றி இருத்தல் வேண்டும். மாவட்ட வள பயிற்றுநர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவர். மதிப்பூதியம், கண்காணிப்பு, மேற்பார்வை, ஆவணப்படுத்துதல் மற்றும் பயணப்படி ஆகியவவை சேர்த்து ரூ.18 ஆயிரம் – அதிகபட்சமாக வழங்கப்படும். 1.6.2026 அன்று 30 முதல் 40 வயதுடைய பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை) விண்ணப்பிக்கலாம்.

ஏதேனும் முழு நேரக்கல்வி முறையில் முதுகலை படிப்பில் ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். 4 வருடங்கள் அனுபவம் இருத்தல் வேண்டும். வட்டார வள பயிற்றுநர்கள் வட்டாரத்திற்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவர். மதிப்பூதியம், கண்காணிப்பு, மேற்பார்வை, ஆவணப்படுத்துதல் மற்றும் பயணப்படி ஆகியவவை சேர்த்து ரூ.10 ஆயிரத்து 500- அதிகபட்சமாக வழங்கப்படும். 1.6.2026 அன்றும் 25 முதல் 45 வயதுடைய பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை) விண்ணப்பிக்கலாம். கல்விதகுதி ஏதேனும் முழு நேரக்கல்வி முறையில் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் வேண்டும். மேலும் அனைத்து பணிகளுக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருத்தல் வேண்டும்.

தகவல் பரிமாற்றத்தில் தகுந்த திறன், ஒருங்கிணைப்பு, மனித உறவுகளை பேணுவதில் ஆற்றல், கைபேசி, செயலிகளை கையாள்வது, கணினியில் எக்ஸ்எல் மற்றும் வேர்டு , இணைய பயன்படுத்துதலில் போதிய அறிவு பெற்றிருத்தல் அவசியம். இப்பதவிக்கான தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரடியாகவோ விண்ணப்பங்களை வரும் 29ந் தேதிக்குள் தகுதி குறித்த சுய சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடங்கள் இத்திட்டத்திற்க்கான 24 மாத காலவரையறை கொண்ட தற்காலிக பணியிடங்களாகும்.

இதற்கான விண்ணப்ப படிவம் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஒருங்கிணைந்த கட்டிடம், கலெக்டர் அலுவலக வளாகம், திருவாரூர் மாவட்டம் – 610 004 என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://tncdw.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: