இந்திய இன்ஜினியர் சுட்டுக் கொலை: அமெரிக்காவில் பயங்கரம்

பிலடெல்பியா: தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷுல் குஞ்சா (28), ஐதராபாத்தில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக கடந்த 4ம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றார். அங்கு தனது கல்வியை வெற்றிகரமாக முடித்த அவர், கே.டபிள்யூ.சி என்ற முன்னணி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணியில் சேர்ந்தார். வார இறுதி நாட்களில் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக பீட்சா டெலிவரி செய்யும் பகுதிநேர வேலையையும் அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பீட்சா வழங்க வந்த அன்ஷுலை, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் அவரது தலையில் பலமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது திட்டமிட்ட சதி என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அன்ஷுலின் சகோதரி தன்வி கூறுகையில், ‘எனது சகோதரனை வரவழைக்கவே மர்மநபர்கள் போலி பீட்சா ஆர்டர் கொடுத்துள்ளனர். அவனிடம் இருந்த எதையும் திருடாமல் உயிரை மட்டும் பறித்துள்ளதால் இது திட்டமிட்ட படுகொலை என்பது புரிகிறது. பெற்றோர் இனி தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டாம்’ என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் போலீசார் உதவியுடன் அன்ஷுலின் உடலை மீட்டு, வரும் திங்கட்கிழமை 16ம் தேதிக்குள் தாயகம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories: