மாஸ்கோ: உக்ரைன் மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா போர் தொடுத்தது. இதற்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் இன்னும் பலனளிக்காத நிலையில் இருநாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சர்வதேச பொருளாதா மன்ற கூட்டம் கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கும் முக்கிய கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதனிடையே கடந்த 4ம் தேதி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பால்டிக் கடலில் அமைந்துள்ள மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் ராணுவம் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை கொண்ட முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டு, தீப்பிழம்புகள் வெடித்து சிதறின.
இந்த சூழலில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினுக்கு எழுதிய கடிதத்தில், “நமக்கிடையேயான நேரடி சந்திப்பின் மூலம் 4 ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன்” என அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து சர்வதேச பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய புடின், “சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை ஜெலன்ஸ்கியை சந்திப்பதில் எந்த பயனும் இல்லை” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மீது உக்ரைன் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கவர்னர் அலெக்சாண்டர் பெக்லோவ் கூறுகையில், “செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சுற்றியுள்ள லெனின்கிராட் பகுதியில் 141 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த பகுதியில் உள்ள மக்கள் யாரும் வௌியே வர வேண்டாம்” என்றார். ஆனால் இந்த தாக்குதல்களில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
