பியோங்யாங்: வடகொரியா, தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு திறந்துள்ளது. சர்வதேச தடைகளை தாண்டி, திறக்கப்பட்டுள்ள இந்த ஆலையை, அதிபர் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு செய்தார். வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று அதிபர் கிம் ஜாங் உன் இந்த புதிய ஆலையை பார்வையிட்டார்.
அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வடகொரியாவின் அணுசக்தி பொருட்கள் உற்பத்தி திறன் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய ஆலை நாட்டின் எந்த பகுதியில் அமைந்துள்ளது என்ற விவரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வடகொரியா வெளியிடவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் சூழலில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
