போர் நிறுத்தத்திற்கு தயார்: புதினுக்கு உக்ரைன் அதிபர் கடிதம்

 

கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். அதில், அவருடன் நேருக்கு நேர் சந்திப்புக்கு முன்மொழிந்ததோடு, “முழுமையான போர் நிறுத்தத்திற்கும் தயாராக இருக்கிறோம். இரு நாட்டுக்கும் இடையிலான நேரடி ஈடுபாட்டின் மூலம் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் முன்மொழிகிறது. போர் கைதிகளை பரிமாறி கொள்ள தயாராக இருக்கிறோம். இது “போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு நல்ல முன்னுரையாக’ இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில், நேட்டோ அமைப்பு அல்லது புவிசார் அரசியல் என எதை சொன்னாலும், இந்த தேவையற்ற போர் புதினின் தனிப்பட்ட பிடிவாதத்தால் மட்டுமே நடப்பதாகவும், ரஷ்யாவில் தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அடுத்த கட்ட ராணுவ திரட்டல் ஆகியவற்றால் ரஷ்ய மக்கள் சோர்வடைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சமீபத்தில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களை சுட்டிக்காட்டி ரஷ்யாவின் பாதுகாப்பு ஓட்டைகளை விமர்சித்து உள்ளார்.

ஈரான் போரின் காரணமாக அமெரிக்க தலைமையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தை பல மாதங்களாக தடைபட்டுள்ளன. இஸ்தான்புல், அபுதாபி மற்றும் ஜெனிவாவில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த முந்தைய சுற்று பேச்சுவார்த்தைகள், போருக்கு பிந்தைய தீர்வில் முக்கிய பிரச்னையான நிலப்பரப்பு குறித்த ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த தவறிவிட்டன. தற்போதைய கடிதத்தின் மூலம் இந்த போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: