பீஜிங்: 2026ம் ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜூன் 8, 9 தேதிகளில் வடகொரியா சீன அதிபர் ஜி ஜின்பிங் செல்கிறார். அணுசக்தி, வர்த்தகம் உள்ளிட்டவைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியா, கடந்த சில ஆண்டுகளில் ரஷியாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் வடகொரியா வழங்கி வருகிறது.
இந்த சூழலில், அணு ஆயுத பலம் கொண்ட வடகொரியாவுடன் சீனா தனது உறவுகளை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜின்பிங், அடுத்த வாரம் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் வடகொரியாவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜின்பிங் மீண்டும் வடகொரியா செல்ல உள்ளார்.
இந்த தகவலை சீனா மற்றும் வடகொரியா அரசுகள் உறுதி செய்துள்ளன. கடந்த ஆண்டில் வடகொரியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக சீனா விளங்கியிருக்கிறது. சீன அரசுடன் வடகொரிய அதிபர் கிம் நட்புறவுடன் பழகி வருகிறார். இந்த சூழலில் சீன அதிபரின் வடகொரிய பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
