துபாய்: குவைத் விமான நிலையத்தின் மீது நேற்று முன்தினம் ஈரான் நடத்திய தாக்குதலில் பலியானவர் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த டெய்லர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடல் இன்று இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஈரான் மீது அமெரிக்கா நேற்று முன்தினம் திடீரென தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக குவைத்தின் சர்வதேச விமான தளத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதலை முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த இந்திய பயணி உயிரிழந்தார்.
மேலும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விமான நிலையத்தின் மீதான தாக்குதலின்போது உயிரிழந்தவர் மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைனியை சேர்ந்த டெய்லர் மன்சூர் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் கடந்த 30 ஆண்டுகளாக குவைத்தில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ரட்லாமில் 8ம் தேதி நடைபெறும் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதாக அவர் சொந்த ஊர் வருவதற்காக திட்டமிட்டுள்ளார்.
புதனன்று காலை7.30 மணி விமானத்தில் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்த அவர் தாக்குதலில் உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மன்சூர் அகமதுவின் உடலுக்கு இந்திய தூதர் பரமிதா திரிபாதி நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மன்சூர் உடலை இந்தியா அனுப்பி வைத்தல் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளை குவைத் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்திய தூதரகம் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றது. உயிரிழந்த டெய்லர்மன்சூர் அகமது உடல் இன்று இந்திய எடுத்துவரப்படுகின்றது.
