திருமலை: அமராவதியில் விமான நிலையம் அமைய உள்ள இடத்தின் அருகே நடிகர் பாலகிருஷ்ணா 100 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரைப்பட நடிகரும், முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், தற்போதைய முதல்வர் சந்திரபாபுவின் மைத்துனருமானவர் பாலகிருஷ்ணா. ஹிந்துபூரம் எம்எல்ஏவாக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆந்திர தலைநகர் அமராவதியில் நடிகர் பாலகிருஷ்ணா தனது மனைவி வசுந்தராதேவி பெயரில் 100 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குண்டூர் மாவட்டம், பாமுலபாடு, ரவேலா பகுதிகளில் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதம் இந்த நிலங்கள் வாங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் ஒரு ஏக்கர் மதிப்பு ரூ.20 லட்சம் எனவும், இந்த நிலங்கள் வசுந்தராதேவி பங்குதாரராக உள்ள ‘கிளாசிக் இன்போடெக்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
நிலப்பதிவேடுகள் தொடர்பான அரசு இணையதளமான ‘மீபூமி’யிலும் இந்த விவரங்கள் காணப்படுகிறதாம். ஆந்திர தலைநகரான அமராவதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ரவேலா பகுதியில், நடிகர் பாலகிருஷ்ணா முன்கூட்டியே நிலம் வாங்கியுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் நிலம் குறித்து பாலகிருஷ்ணா குடும்பத்திடம் இருந்து எவ்வித பதிலும், எதிர்ப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
