டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

புதுடெல்லி: சென்னையில் சொத்து தகராறில் டாக்டர் சுப்பையா வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவரான சுப்பையா, சொத்து தகராறில் கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுச்சாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் மற்றும் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை அமர்வு நீதிமன்றம்,‘‘குற்றம்சாட்டப்பட்ட பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய ஒன்பது பேரும் குற்றவாளிகள் என அறிவித்தது. இதில், பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இருப்பினும் அப்ரூவரான ஐயப்பன் அரசு சாட்சி என்பதால், அவருக்கு மட்டும் தண்டனை விதிக்கப்படவில்லை.

இதையடுத்து கீழமை நீதிமன்ற மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,‘‘குற்றச்சாட்டப்பட்ட ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவர்கள் அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. அதாவது விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ஆய்வு செய்யாமல் ரத்து செய்தது என்பது சட்டத்திற்கு புறம்பானதாகும். எனவே இந்த வழக்கில் ஏழு பேருக்கு தூக்கு மற்றும் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்பதை குறைத்து, குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையாக வழங்கி உறுதி செய்கிறோம்.

அதேப்போன்று குற்றவாளிகளை விடுவித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு அனைத்து குற்றவாளிகளும் சரணடைய வேண்டும். குறிப்பாக இதில் வழக்கில் பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோரின் வயதை கருதி அவர்களின் தண்டனையை குறைப்பது தொடர்பாக ஆளுநருக்கு மனு அளிக்க அனுமதி வழங்குறோம். இதையடுத்து இரண்டு வாரத்தில் ஆளுநர் அவர்களின் மனுவை பரிசீலித்து உரிய முடிவை எடுத்து தெரிவிப்பார். அதுவரை பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோரை தவிர மற்ற அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

Related Stories: