பொது இடங்களில் தெரு நாய்களை அனுமதிக்க முடியாது: தேவைப்பட்டால் கருணைக்கொலை செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

புதுடெல்லி: நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் அது தொடர்பான விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உச்ச நீதிமன்றம், பல்வேறு ஆவேசமான உத்தரவுகளை கண்டிப்புடன் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தெரு நாய்களை பிடித்து உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அந்த நாய்கள் எங்கு பிடிக்கப்படுகிறதோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் என்று கூறியிருந்தது.

மேலும், ரேபிஸ் நோய் பரப்பக்கூடியதாக கருதப்படும் நாய்களை பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில் அடைத்து வைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை, தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கக் கூடாது என்ற உத்தரவில் திருத்தங்கள் கோரிய மனுக்களை ஏற்க முடியாது என்பதால் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும் தெரு நாய் கடிகள் என்பதை மறுக்கவே முடியாது. குறிப்பாக ராஜஸ்தான்,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தெரு நாய் கடிகள் தொடர்ச்சியாக அதிகரித்திருப்பதை காண்கிறோம். 2026 தொடங்கி இந்த நான்கு மாதங்களுக்குள்ளாக இரண்டு லட்சம் தெரு நாய் கடி சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடந்துள்ளது. நாய் கடியால் சிறுவர்கள், முதியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மருத்துவமனைகள் விமான நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், நகர்ப்புற மையங்கள் போன்றவற்றில் நாய் கடி சம்பவங்கள் நடப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் கூட மீண்டும் நாய் கடி சம்பவங்கள் நிகழ்வது அரசின் அலட்சியத்தை காண்பிக்கிறது. சமீபத்தில் கூட ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு பயணி சூரத் நகரில் தெரு நாய் கடிக்கு உள்ளாகி இருக்கிறார். இவ்வாறான தொடர் நிகழ்வுகள் மூலம் விலங்குகள் நலவாரிய விதிமுறைகள் உரிய முறையில் செயல்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மேலும் கருத்தடை, தடுப்பூசி விதிமுறைகளை முறையாக அரசுகள் செயல்படுத்தவில்லை. இதனால் தான் தற்போதைய பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு ஆபத்து, நாய்கள் பெருக அது காரணமாகியது. நாய்கள் கடிக்கும் புகார் அதிகரித்துள்ளன. சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர், நிலைமை மிக மோசமாக உள்ளது. விமான நிலையங்களில் கூட நாய்கள் கடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் இருந்து நாய்களை பிடித்து நீக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. நாடு முழுவதும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்பது தற்போது நிரூபனம் ஆகியுள்ளது.

நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும். உரிய தடுப்பூசி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவெளியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் நல மையங்களை ஏற்படுத்த வேண்டும். கருத்தடை, தடுப்பூசி போன்ற நடைமுறைகளை முறையாக செயல்படுத்த வேண்டும். இந்த உத்தரவுக்கு ஏற்ப உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் தேசிய நெடுஞ்சாலை துறை இணைந்து செயல்பட வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் நாய்கள் அலைந்து திரிவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை உரிய தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். வெறிபிடித்த, குணப்படுத்த முடியாத நோய்வாய்ப்பட்ட அல்லது மனித உயிருக்குத் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளும் தெருநாய்களைச் தேவைப்பட்டால் சட்ட விதிமுறைகளின்படி கருணைக் கொலை செய்யலாம்அனைத்து மாநில அரசுகளும் இந்த தீர்ப்பை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: