புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள் அல்லத பிற மத நிறுவனங்களிடம் உள்ள தங்கத்தை பணமாக்கும் திட்டம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள் அல்லத மத நிறுவனங்களிடம் பாதுகாப்பாக உள்ள தங்க இருப்புக்களை பணமாக்கும் புதிய திட்டம் ஒன்றை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம், ஆன்மிக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள் அல்லது மத நிறுவனங்களிடம் உள்ள தங்கத்தை பணமாகும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசிடம் இல்லை. கோயில்கள், கோபுரங்கள், கதவுகள் அல்லது பிற கோயில் கட்டமைப்புக்களில் பதிக்கப்பட்டுள்ள தங்கத்தகடுகள் இந்தியாவின் உத்திசார் தங்க இருப்புகளாக கருதப்படும் என்று கூறப்படும் தகவல்கள் பொய்யானவை.
இத்தகைய வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. திசைதிருப்பக்கூடியவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவை. இதுபோன்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
