புதுடெல்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 4 ஆண்டுகளாக அமலில் இருந்த விலை மாற்றத் தடையை நீக்கியதை தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
கார்கே தனது எக்ஸ் தள பதிவில்,‘‘விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வெறும் நான்கு நாட்களே ஆன நிலையில், மோடி அரசு மீண்டும் ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. அதற்கான களத்தை அமைத்துவிட்டு சேமிப்பு குறித்துப் போதித்துக்கொண்டே தங்கள் தோல்விகளுக்கான சுமையை மக்கள் மீது சுமத்தும் முயற்சி முழு வீச்சில் நடந்து வருகின்றது. சாமானிய மக்களை சுரண்டுவதும், அமெரிக்காவில் இருந்து அதானிக்கு தடையற்ற அனுமதியை பெற்றுத்தருவதும் தான் மோடியின் சமரச மாதிரி ஆகும்.
விஸ்வ குரு என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்டு பொய்யான பெருமையைப் பேசித் திரியும் மோடிஜி, ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதியை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்குமாறு அமெரிக்காவிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார். அவர் ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்யும்போது 140கோடி இந்தியர்களின் தன்மானத்திற்கு பங்கம் விளைவிக்கிறார். இதற்கு முன் ஆட்சி செய்த எந்தவொரு அரசும் இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு தாழ்ந்தது இல்லை.
இப்போது எழும் கேள்வி இதுதான். அரசின் கூற்றுப்படி ரஷ்ய எண்ணெய் வாங்க நமக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு எனும் பெரும் சுமையை சாமானிய மக்கள் மீது ஏன் சுமத்த வேண்டும்? நான் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கூறுகிறேன். பாஜவிடம் தொலைநோக்குப் பார்வையும், தலைமைத்துவமும் அறவே இல்லை. வெளிநாடுகளில் நிதியுதவியுடன் மக்கள் தொடர்பு பணிகளை செய்வதால் மட்டும் நீங்கள் விஸ்வகுரு ஆகிவிட முடியாது.
மோடி ஜீ நீங்கள் மக்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும். உண்மையான கேள்விகளில் இருந்து ஓடாதீர்கள். இந்த நெருக்கடி குறித்து நீங்கள் உண்மையில் என்ன செய்கிறீர்கள் என்று பதிலளித்தால் மட்டுமே நீங்கள் மக்களின் உண்மையான பிரதான் சேவக் என்று அழைக்கப்படுவீர்கள். இல்லையெனில் நீங்கள் சாதாரண பிரசாரகராக மட்டுமே இருப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
