புதுடெல்லி: மத்திய கிழக்கு போர் காரணமாக சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது இதையடுத்து, கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 90 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாகவே நீடிக்கிறது. சமீபத்தில் லிட்டருக்கு 91 பைசா என விலை உயர்த்தப்பட்ட பிறகும், இந்தியாவில் எரிபொருள் விலை சுமார் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. பெருமளவில் மானியம் பெறும் வளைகுடா நாடுகளைத் தவிர, உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இது மிகக் குறைந்த விலை உயர்வாகும்.
பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், அந்தச் சுமையை உடனடியாக நுகர்வோர் மீது சுமத்துவதற்குப் பதிலாக, கணிசமான இழப்புகளைத் தாங்களே ஏற்றுக்கொண்டதால், இந்தியா ஒரு விதிவிலக்காகத் திகழ்கிறது.நெருக்கடி தொடங்கிய பிறகு 76 நாட்களுக்கு, இந்தியப் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், அந்தச் சுமையை நேரடியாகக் மக்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக, தாங்களே ஏற்றுக்கொண்டன.
மியான்மரில் பெட்ரோல் விலை 89.7 சதவீதமும், மலேசியாவில் 56.3 சதவீதமும்,பாகிஸ்தானில் 54.9 சதவீதமும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 52.4 சதவீதமும் உயர்ந்துள்ளது. மியான்மரில் டீசல் விலை 112.7 சதவீதமும், மலேசியாவில் 71.2 சதவீதமும், பாகிஸ்தானில் 44.9 சதவீதமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 86.1 சதவீதமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
