டீ குடிக்கலாம் என்று காரில் அழைத்துச்சென்று கொடூரம் பி.டெக் மாணவியை மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம்: சக மாணவன் கைது

 

திருமலை: டீ குடிக்கலாம் எனக்கூறி காரில் அழைத்துச்சென்று வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து பி.டெக் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக மாணவனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சவுட்டுப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் உடுதலா உதய்.

இப்ராஹிம்பட்டணம் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் 3ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் கடந்த 14ம்தேதி உடுதலா உதய், காரில் வெளியே சென்றார். அப்போது, வழியில் தன்னுடன் படிக்கும் சக மாணவியை பார்த்து காரை நிறுத்தினார். அவரிடம் அருகே உள்ள கடைக்கு சென்று டீ அருந்தலாம் எனக்கூறி அழைத்துள்ளார்.

அதன்படி வந்த மாணவியை காரில் தில்சுக் நகருக்கு அழைத்து சென்றார். அங்குள்ள கடையில் இருவரும் டீ அருந்தியுள்ளனர். பின்னர் திரும்பி வந்தனர். வரும் வழியில் அங்குள்ள கடையில் மதுபானம் வாங்கிய உடுதலா உதய், மாணவியை பி.டி.எஸ். சாலையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு காரிலேயே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது உதய், மாணவியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தார். பின்னர் அருகே உள்ள அறைக்கு அழைத்து சென்றார். அறைக்கு சென்றதும் மாணவி மதுபோதையில் மயங்கி சரிந்தார். அவரை உதய், பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினார்.

சிறிது நேரத்தில் போதை தெளிந்த மாணவி தனது நிலையை அறிந்து அழுதார். இதுகுறித்து இப்ராஹிம்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த உடுதலா உதய்யை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: