திருமலையில் 1 மணி நேரம் கனமழை: ஏழுமலையான் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது

 

திருமலை: திருமலையில் சுமார் 1 மணி நேரமாக பெய்த பலத்த மழையால் ஏழுமலையான் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் திருமலையில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் கொளுத்தியது. தொடர்ந்து மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணியளவில் திடீெரன கனமழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து கொட்டித்தீர்த்த பலத்த மழையால் திருமலையில் பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. ஏழுமலையான் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள், குடை பிடித்தபடியும், ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள், மண்டபங்கள், மடங்களில் தஞ்சம் அடைந்தனர். இதேபோல் ராம்பகிஜா ஓய்வறை, ஷாப்பிங் காம்பளக்ஸ் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. பல கடைகளில் தண்ணீர் புகுந்தது. வாகனங்கள் மழைநீரில் மூழ்கியது. கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த பக்தர்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: