சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல்

சென்னை: சென்னையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, தெரு நாய்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 81 ஆயிரமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் தெருநாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாலை நடைபயிற்சி, இரவு நேரம் வேலை முடித்து வீடு திரும்புவோர், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், முதியோர் என தெருநாய்கள் பயமுறுத்தாதவர்கள் பாக்கி இல்லை. தெரு நாய் தானே என்று இன்று எந்த நாயையும் அலட்சியப்படுத்திவிட்டு கடந்து போய்விட முடியாது, இருசக்கர வாகனத்தில் சென்றாலும் நடந்து சென்றாலும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. சமீபகாலமாக, குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் கடித்து குதறுகின்றன. முறையான கண்காணிப்பின்றி நாய்களின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், சென்னையில் இருக்கும் தெருநாய்களை கணக்கெடுத்து அதனை அதிகாரப்பூர்வமாகவும் வெளியிட்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. அந்த கணக்கெடுப்பில் இருக்கும் எண்களை பார்த்தால் கண்கள் சுற்றும். ஆம், நூற்றுக்கணக்கிலோ, ஆயிரக்கணக்கிலோ அல்ல சென்னையில் தெரு நாய்கள் இருப்பது லட்சக் கணக்கில். சென்னை மாநகராட்சி புள்ளிவிவரப்படி சொல்வதென்றால், 1 லட்சத்து 81 ஆயிரம் நாய்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிகிறது.

கருத்தடை மேற்கொள்வதிலும் தொய்வு உள்ள நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கை 2 மடங்குக்கும் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தெருநாய் கடிப்பதால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 10ம் தேதி சென்னை மாநகராட்சி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை நடத்தியது. இதில் நாய்களின் பாலினம், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா உள்ளிட்ட பல விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்டன. சென்னையில் 2018ம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கிடும் பணி நடைபெற்றது. அப்போது 59 ஆயிரம் நாய்கள் இருந்தன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற்றது. தற்போது சென்னை மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 1,81,347 தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சென்னை மாநகராட்சியிடம் வழங்கப்பட்டது. இதில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம், வளசரவாக்கம், அண்ணாநகர், திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டங்களில் தெருநாய்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிகபட்டமாக அம்பத்தூர் மண்டலத்தில் 23,980 தெருநாய்களும் ஆலந்தூர் மண்டலத்தில் 4875 தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 100 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 7 ஆயிரத்து 165 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி பார்த்தால், இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் சென்னையில் வெறும் 58 ஆயிரம் தெரு நாய்களே இருந்த நிலையில், தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்து 50ஆயிரம் நாய்களுக்கு மேல் பெருகியிருப்பது தெரியவந்துள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பீதியை கிளப்பியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் எந்த தெருக்களுக்குள் செல்ல முடியாத அளவுக்கு நாய்களின் தொல்லை பெருந் தொல்லையாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாய்கள் ஜாக்கிரதை என்ற போர்டை தெருக்கு தெரு மாட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: