சென்னை: தேனீ வளர்ப்புத் தொகுப்பு மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சமுதாய ரீதியாக வலுப்படுத்திடும் வகையில், துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு நவீன தொழில்களில் பயிற்சி அளித்து, அத்தொழிலை துவங்குவதற்குத் தேவையான நிதி உதவியினையும் வழங்கி வருகிறது.
இதன் ஒருபகுதியாக, சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்வதற்குத் தேவையான பயிற்சி, தொழில்நுட்ப உதவி, உட்கட்டமைப்பு மற்றும் நிதி உதவியினை வழங்கிடும் வகையில், நடப்பாண்டில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் ஒரு சிறப்புத் திட்டத்தினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தேனீ வளர்ப்பினை சுய உதவிக் குழுவினரிடையே ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு தேனீ வளர்ப்புத் தொகுப்பிற்கும் ரூ.3 லட்சம் சுழல் நிதி வழங்கி, தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
20 மகளிர் கொண்ட ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தேனீ பெட்டிகள் வீதம் மொத்தம் 100 தேனீப் பெட்டிகள் வாங்குவதற்காக ரூ.1.5 லட்சமும், முகக்கவசம், புகைமூட்டி, தேனீ பிரஷ், தேன் பிரித்தெடுக்கும் கருவி போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாயும், தேன் சுத்திகரிப்பு, பதப்படுத்தும் இயந்திரம் கொள்முதல் செய்வதற்கு ரூ.1.15 லட்சமும், இவ்வியந்திரங்களை நிறுவுவதற்கு 11 ஆயிரம் ரூபாயும், தேனீ வளர்ப்பு, தேன் பதப்படுத்துதல் தொடர்பான பயிற்சிக்கு 4 ஆயிரம் ரூபாயும் என ஒவ்வொரு தொகுப்புக்கும் ரூ.3 லட்சம் சுழல் நிதியாக வழங்கப்படுகிறது.
இத்திட்டம் சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிர் தேர்வு செய்யப்பட்டு, தேனீ வளர்ப்பில் முனைப்பாக ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர்கள் அல்லது தோட்டக்கலைத்துறை அல்லது கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அல்லது வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் தேனீ வளர்ப்புத் தொழில் நுட்பம் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில், அனைத்து பயனாளிகளுக்கும் தேவையான தேனீப் பெட்டிகளை தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் தரமான நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்வதற்கு மாவட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை துணை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் 1480 சுய உதவிக் குழு மகளிர் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ரூ.2.22 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பருத்தி, சூரிய காந்தி, தென்னை, மக்காச்சோளம், கம்பு, சோளம், பழப்பயிர்கள், காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற இயலும் என்பதோடு, தேனீ வளர்ப்பில் உள்ள நுணுக்கங்களை சுய உதவிக் குழு மகளிர் நன்கு தெரிந்து கொண்டு, அதன் மூலம் தேன் மட்டுமல்லாது, தேன் மகரந்தம், ராயல் ஜெல்லி, தேன் மெழுகு போன்ற தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் துணைப் பொருட்களையும் சேகரித்து நல்ல வருமானம் ஈட்ட இயலும் என் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post தேனீ வளர்ப்புத் தொகுப்பு மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி appeared first on Dinakaran.