சென்னையில் உள்ள செல்லியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (11.11.2024). சென்னை, அயனாவரம், அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலில் ரூ.60.75 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

சென்னை, அயனாவரம், அருள்மிகு பரசுராம லிங்கேஸ்வரர் திருக்கோயிலின் குழுக் கோயிலான அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலானது பழமையான திருக்கோயிலாகும். இத்கோயிலுக்கு கடந்த 20.06.2006 அன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்திட கடந்த 15.07.2024 அன்று பாலாலயம் செய்யப்பட்டு, ரூ. 60.75 லட்சம் மதிப்பீட்டில் மூன்று திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் ரூ. 35 இலட்சம் செலவில் திருக்கோயிலுக்கு இராஜகோபுரம் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. ரூ 25.75 இலட்சம் மதிப்பீட்டில் மகா மண்டபத்தினை உயர்த்திக் கட்டுதல் மற்றும் தரைதளத்தை உயர்த்தி கருங்கல் தரைதளமாக அமைத்தல் போன்ற திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (11.11.2024) இத்திருக்கோயிலுக்கு நேரில் சென்று, அங்கு நடைபெற்று வரும் குடமுழுக்கிற்கான திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கியதோடு, இத்திருக்கோயிலுக்கு பொங்கல் மண்டபம் அமைத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது சென்னை மண்டல இணை ஆணையர் கி. ரேணுகாதேவி, உதவி ஆணையர் க. செல்வம், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஆர்.முரளி பாபு மற்றும் அறங்காவலர்கள் எம். எஸ். பழனி சுவாமி, வெ. சபாபதி வே. மோகன், ஜெ. ஈஸ்வரி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் வே.வாசு, திருக்கோயில் செயல் அலுவலர் திரு டி.மூவேந்தன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சென்னையில் உள்ள செல்லியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: