‘எமிஸ்’ பணிக்கு 6 ஆயிரம் பேர் நியமனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு மார்ட்டின் குழுமம் ரூ.7 கோடியில் டிஜிட்டல் வகுப்பறைகளுடன் புதிய கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளது. இதனை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, இன்று திறந்து வைத்து பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்ற அளவுக்கு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். நல்ல சமுதாயத்தை தருகின்ற ஒரு கல்வியாக உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட 1 கோடியே 27 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், ‘நமக்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ என்னும் திட்டத்துக்கு முதல்வர், தனது சொந்த நிதியாக ரூ.5 லட்சம் கொடுத்து ஆரம்பித்து வைத்தார். அது இன்று பல கோடியை தாண்டி செல்கிறது. கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 14,109 வகுப்பறை கட்டி கொடுத்துள்ளோம். இன்னும் 18 ஆயிரம் வகுப்பறை கட்டி கொடுக்க உள்ளோம். எனது இரு கண்களாக கல்வியையும், சுகாதாரத்தையும் பார்க்கிறேன் என்று முதல்வர் அடிக்கடி சொல்வார். அந்த வகையில் பள்ளி கல்வி துறையில் ஒரு நல்ல ஒரு கட்டமைப்பை உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.

பள்ளி கல்வி துறை வகுப்பறை மேம்பாட்டுக்கு ரூ.455 கோடி ஒதுக்கி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில் ‘பள்ளி கல்வி துறையில் எமிஸ் ஒர்க் மேற்கொள்ள பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதனால் இப்பணியை மேற்கொள்ள 6 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுவார்கள். ‘அமரன்’ திரைப்படத்தை மாணவர்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டும் என பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளது என்பது அவரது கருத்து’ என்றார்.

The post ‘எமிஸ்’ பணிக்கு 6 ஆயிரம் பேர் நியமனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: