தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் மாணவ குழுக்களுக்கு ரூ. 9 கோடியே 78 லட்சம் நிதி உதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று (11.11.2024) MSME துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – EDII சார்பில் நடைபெற்ற விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது; இன்று நடைபெற்ற கண்காட்சியில் நம் மாணவர்களின் புதிய கண்டுப்பிடிப்புகளான – உயர் தொழில் நுட்ப விவசாய வாகனம் – பழம் வெட்டும் கருவி – ஒலி மாசினை கட்டுப்படுத்தும் கருவி – கழிவறையை பயன்படுத்திய பின் தானாகவே சுத்தப்படுத்தும் கருவி – பொதுக்குழாய்களில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் கருவி – பிளாஸ்டிக் செங்கல் – நகரும் சோலார் பேனல் என பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் புத்தாக்க தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 60 மாணவ குழுக்களுக்கும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20 மாணவக் குழுக்களுக்கும் என 80 புதிய கண்டுபிடிப்புக்களுக்கு ரூ. 39 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது.

இந்த பரிசுகளை பெறும் கல்லூரி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தொழிலை தொடங்கி நடத்திட வேண்டும் என்றால் தொழில் முனைவு பயிற்சியும் வழிக்காட்டுதலும் மிகவும் முக்கியமானது. இதற்காகவே 2001- ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – EDII தொடங்கப்பட்டது. EDII நிறுவனம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் முனைவு பயிற்சியுடன் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக நிதி உதவிகளையும் அளித்து வருகிறது. கடந்த 23 ஆண்டுகளாக EDII நிறுவனம் இந்த பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. வேகமாக முன்னேறி கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞான உலகில் உலக நாடுகளுடன் நாம் போட்டி போடுவதற்கு புதிய புதிய கண்டுப்பிடிப்புகள் மிகவும் அவசியம். அத்தகைய புதிய கண்டுடிப்பிடிப்புகளை உருவாக்கிட தமிழ்நாட்டில் உள்ள புத்தாக்க சிந்தனை கொண்ட மாணவர்கள், இளைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து, தேவையான நிதி உதவிகளை வழங்கிட முதல்வர் அவர்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

முதல்வர் அவர்களின் சீரிய வழிக்காட்டுதலின்படி EDII நிறுவனம் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் புத்தாக்க தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டம், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் தொழில் வளர் காப்பகங்கள் மூலமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மாவட்ட தலைநகரங்கள் – கல்லூரிகள்- பள்ளிகள் மற்றும் வட்டார அளவிலும் தொழில் தொடங்க பயிற்சியும், விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கழக அரசு பொறுப்பேற்ற 3 ½ ஆண்டு காலத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 56 ஆயிரத்து 620 நபர்களுக்கு தொழில் தொடங்க பயிற்சிகளும், புத்தாக்க தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 306 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 6 லட்சத்து 40 ஆயிரத்து 820 கல்லூரி மாணவர்களுக்கு தொழில் தொடங்க விழிப்புணர்வும், அரசு கல்லூரிகளில் உள்ள தொழில் வளர் காப்பகங்கள்-Incubation Centres மூலம் 1 லட்சத்து 5 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டும் அல்லாமல் தொழிலிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் “பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தினை” அறிவித்தார். இதன்படி, 4,485 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற 12 லட்சத்து 45 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் கடந்த 3 ½ ஆண்டுகளில் 20 லட்சத்து 47 ஆயிரத்து 440 இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில் தொடங்க பயிற்சியும், விழிப்புணர்வும் அளிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தொழில் தொடங்க பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொழில் துறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகான போட்டிகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு நடத்தப்பட்ட போட்டிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீர்வுகள் பெறப்பட்டு அதில் 600 தேர்வு செய்யப்பட்டு சிறந்த 60 தீர்வுகளுக்கு இன்று ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. கழக அரசு பொறுப்பேற்று இதுவரை 110 மாணவக் குழுக்களுக்கு ரூ. 77 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆராய்ச்சியை மேற்கொள்ளவும், வடிவமைப்புகளை தயாரிக்கவும், தேவைப்படும் நிதிக்காக புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.

கண்டுப்பிடிப்புகளை பொருட்களாக தயாரிக்கவும் – சந்தைப்படுத்தவும் ரூ. 5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. கடந்த 3 ½ ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ், 329 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூ. 8 கோடியே 69 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 மாணவ குழுக்களின் சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டும் – நடப்பாண்டும் மாநில அளவில் வெற்றி பெற்ற 80 சிறந்த மாணவ குழுக்களுக்கு ரூ. 32 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களின் கீழ் 519 இளைஞர்கள் – மாணவ குழுக்களுக்கு ரூ. 9 கோடியே 78 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களை இளம் தொழில் முனைவோர்களாக வளர்த்தெடுக்க 124 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழில் வளர் காப்பகங்கள் – Incubation Centres அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 9 அரசு கல்லூரிகளில் உள்ள இன்குபேஷன் சென்டர்களுக்கு ரூ. 20 கோடி மதிப்பீட்டில், புதிய இயந்திரங்கள் பரிசோதனை கூடங்கள் நிறுவப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன.

அரசின் தொழில் வளர் காப்பகங்களை பயன்படுத்தி 198 மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து பலன் அடைந்துள்ளனர். தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு “தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க பட்டய படிப்பு” தொடங்கப்படும் என நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக, 260 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், EDII தலைமையிடத்தில் 10,260 சதுர அடியில் ரூ. 1 கோடியே 72 லட்சம் மதிப்பில் ஒரு பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டய படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்துக் கொண்டுள்ள மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

The post தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் மாணவ குழுக்களுக்கு ரூ. 9 கோடியே 78 லட்சம் நிதி உதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: