விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும் வீரர், வீராங்கனைகளுக்கு “சாம்பியன்ஸ் கிட்” தொகுப்பினை வழங்கினார் துணை முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகம் மற்றும் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு “சாம்பியன்ஸ் கிட்” என்ற விளையாட்டு வீரர்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தக் கூடிய பொருட்களின் தொகுப்பினை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.11.2024) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகம் மற்றும் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும் 553 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு “சாம்பியன்ஸ் கிட்” என்ற விளையாட்டு வீரர்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தக் கூடிய பொருட்களின் தொகுப்பினையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தாவது;
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள நம்முடைய SDAT விடுதி மாணவர்கள், மொத்தம் 2600 நபர்களுக்கு ”சாம்பியன்ஸ் கிட்”-ஐ வழங்குவதில் நாங்கள் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றோம். அதே போல, தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அதன்படி, இராணிப்பேட்டையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள, மாவட்ட விளையாட்டு வளாகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம். மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டியுள்ளோம்.

இன்றைக்கு சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 500 வீரர்கள் வந்துள்ளீர்கள். SDAT விடுதி மாணவர்கள் நீங்கள் எப்போதுமே எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தேசிய அளவிலான அல்லது மாநில விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட எந்த ஒரு விளையாட்டு போட்டி நடந்தாலும், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆகியோரிடம், SDAT வீரர்கள் வந்துள்ளார்களா, எத்தனை பேர் கலந்துகொண்டுள்ளார்கள், அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, விளையாட்டு போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று நான் எப்போதும் கேட்பேன்.
மற்ற இடங்களில் hostels-னு சொன்னா தங்குமிடம், உண்டு உறைவிடம் என்று அர்த்தம். ஆனால் SDAT ஹாஸ்டல் என்றால், தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான, விளையாட்டு வீரர்களை பட்டைத்தீட்டுவதற்கான பயிற்சி களம் என்றுதான் சொல்லவேண்டும். SDAT மாணவர்கள் இன்றைக்கு பல்வேறு சர்வதேச, தேசிய மாநில அளவிலான போட்டிகள்ல சாதித்து வருகின்றீர்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தம்பிகள் பிரவீன், ரமேஷ், சந்தோஷ், தங்கைகள் சுபா வித்யா ஆகியோர் ஒலிம்பிக்ஸ் வரை சென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்.
பிரிக்ஸ் பீச் வாலிபால் விளையாட்டில் (BRICS Beach Volleyball) வெள்ளிப்பதக்கம் வென்ற தம்பி பூந்தமிழன், ஏ.வி.சி.காண்டினென்டல் கப் பீச் வாலிபால் போட்டியில் (AVC Continental Cup Beach Volleyball) வெள்ளிப்பதக்கம் வென்ற தங்கை பவித்ரா, ஆசியன் கிரேடு – 2 ஜூனியர் டென்னிஸ் போட்டியில் (Asian Grade-2 Junior Tennis Tournament) வெள்ளி வென்ற தங்கை சன்மிதா, வெண்கலம் வென்ற தங்கை ஜோசிதா,,, தங்கைகள் சுஜி, ஏஞ்சலினா ஜான், தீபிகா, தம்பி ரவி பிரகாஷ் என்று ஏராளமான சர்வதேச வீரர், வீராங்கனைகளை நம்முடைய SDAT Hostel உருவாக்கி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் SDAT விடுதி மாணவர்கள், நிறைய பதக்கங்களை வென்று உள்ளீர்கள். அதற்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் இன்றைக்கு மாணவர்களாக, வீரர்களா இருக்கலாம். ஆனால், நாளைக்கு வருங்காலத்தில் விளையாட்டுத்துறையின் மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவாக உள்ளீர்கள்.

நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு, நம்முடைய SDAT விடுதி மாணவர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது. அந்த நம்பிக்கையின் அடையாளமாகத்தான் உங்கள் சாதனைக்கு துணை நிற்கக் கூடிய வகையில், இங்கே இந்த சாம்பியன்ஸ் கிட்ஸை வழங்குகின்றோம். இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட ரூ.86 லட்சம் மதிப்பீட்டில், பின்னால் அணியக்கூடிய பை (Back Pack), வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் குடுவை (Thermal Flask), துண்டுகள் (Towels), திறன் கைக்கடிகாரம் (Smart Watch), தொப்பி (Cap), உள்ளிட்ட 8 பொருட்களை இங்கே கொடுக்கின்றோம். இவற்றைப் பெற்றுக் கொள்கின்ற நீங்கள், போட்டிகளில் வெற்றி பெற்று ஏராளமான பதக்கங்களைக் குவிக்க வாழ்த்துகின்றோம். இன்னும் இத்தனை வருடங்களில், இந்தப் போட்டியில் வெண்கலம் (Bronze) வெல்வேன், அந்தப் போட்டியில் வெள்ளி (Silver) வெல்வேன். சீக்கிரமே தங்கப்பதக்கத்தை வென்று காட்டுவேன் என்று உங்களுக்குள்ளாகவே இலக்கு (Target fix) நிர்ணயம் செய்து உறுதியோடு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் (Sports Materials) வாங்க வேண்டுமென்றால், வெளியூர், வெளிநாடு போய் விளையாட வேண்டுமென்றால், அதற்கான செலவு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய திறமைக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றுதான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார்கள்.

இந்த அறக்கட்டளை மூலமாக இதுவரை 600-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகளுக்கு ரூபாய் 14 கோடி அளவுக்கு நிதி உதவிகள் வழங்கி இருக்கின்றோம். இதற்காக நீங்கள் tnchampions.sdat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால், உங்களுடைய திறமைக்கும், தேவைக்கும் ஏற்ப நிச்சயம் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படும்.

நம்முடைய விளையாட்டு விடுதி (Sports Hostel) மாணவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து உடனுக்குடன், நிதி உதவியை வழங்கி வருகின்றோம். நீங்கள் வெற்றி பெற்று, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தால், கண்டிப்பாக உங்களுடைய திறமையை அங்கீகரிக்கின்ற வகையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், உயரிய ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்கி வருகின்றார்கள்.

இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால், நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த இந்த 3 ஆண்டுகளில் சுமார் 108 கோடி ரூபாய் அளவிற்கு உயரிய ஊக்கத்தொகையை நம் முதலமைச்சர் வழங்கி உள்ளார்கள். முக்கியமாக கடந்த மூன்று ஆண்டுகளில் SDAT விடுதிகளுக்கு நம்முடைய கழக அரசு செய்துள்ள பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

நம்முடைய SDAT விடுதிகளின் தரம் எந்த விதத்திலும் குறைவாக இருக்கக் கூடாது, உலகத்தரத்தில்தான் இருக்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அந்த உத்தரவின்படி, விடுதிகளோட நிலை எப்படி உள்ளது என்று ஆய்வுகள் மேற்கொண்டோம். சம்பந்தப்பட்ட விடுதி மாணவர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் என்று எல்லாரிடமும் கலந்தாலோசனை செய்தோம். இந்த ஆய்வுகள், கருத்துக்கள் அடிப்படையில் விடுதிகளை மேம்படுத்த திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

அதேபோன்று விடுதிகளில், நவீன வசதிகளை வழங்க வேண்டுமென்று, படுக்கைகள் (Cots), உணவருந்தும் மேஜை (Dinning Table), கண்காணிப்பு கேமராக்கள் (CCTV cameras), அனைத்து விளையாட்டு போட்டிகளையும் பார்ப்பதற்காக தொலைக்காட்சி பெட்டி (TV), சுடுதண்ணீர் வழங்கும் இயந்திரம் (Geyser), நவீன நீர் சுத்திகரிப்பு அமைப்பு (RO with UV water treatment plant), கொசு வலை அமைப்புகள் (Mosquito nets) குளிர்சாதன பெட்டி (Refrigerator) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டின் போது உங்களுக்கு அடிபடலாம், சிகிச்சை தேவைப்படலாம் என்பதால் அவற்றை மனதில் கொண்டு, உங்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டையும் (Medical insurance) நம் கழக அரசு வழங்கி உள்ளது.

குறிப்பாக விடுதி மாணவர்களின் வருகையை உறுதி செய்திட முக அடையாள அங்கீகார வருகை பதிவு முறை (Face Recognition attendance system)-ஐ எல்லா SDAT விடுதிகளிலும் அமைத்துள்ளோம். இவ்வாறு விளையாட்டு விடுதிகளின் கட்டமைப்புகள் பெருமளவில் சீரமைக்கப்பட்டு உள்ளன. உதாரணத்துக்கு, இங்கே (Jawaharlal Nehru Indoor Stadium) இருந்த பன்னோக்கு அரங்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை மைதானம் (Boxing Hall) அமைக்கப்பட்டுள்ளது,

அதேபோல, ஜவகர்லால் நேரு திறந்தவெளி மைதானத்தில் (Jawaharlal Nehru Outdoor Stadium) பளுதூக்கும் அறை மற்றும் உடற்பயிற்சிக் கூடம் (Weightlifting Hall and Gym Hall) ஆகியவை சர்வதேச தரத்தில் முழுமையாக சீரமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் நிறைய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கின்ற வகையில், புதிய விளையாட்டுகள், விளையாட்டு விடுதிகளில் (hostels) சேர்க்கப்பட்டுள்ளன. ஊசூ, (Wushu), மல்யுத்தம் (Wrestling), மல்லர்கம்பம் (Mallakhamb), சைக்கிள் பந்தயம் (Cycling), டென்னிஸ் (Tennis), வில்வித்தை (Archery), கால்பந்து (Football), கபடி (Kabaddi), கைப்பந்து (Handball) போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் (Tennis stadium), வேளச்சேரி Aquatic Gymnastic Badminton Complex ஆகிய இடங்களில் முதன்மை விளையாட்டு மைய (Centres of Excellence) விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம், காட்பாடி ஆகிய இடங்களில் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் (Sports Hostels of Excellence) திறக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

நம்முடைய அரசு எடுத்த இந்த நடவடிக்கைகளால் விடுதிகளில் 2,300 ஆக இருந்த வீரர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு, கிட்டத்தட்ட 2,800 ஆக உயர்ந்து உள்ளது, இன்னும் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் எந்த ஒரு பரிந்துரையோ, தலையீடோ, இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் SDAT விடுதி சேர்க்கை நடத்தி உள்ளோம். குறிப்பாக ‘SDAT Talent’ என்ற நவீன மென்பொருள் (Software) மூலமாக, மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலமாகத் தான் சேர்க்கை (Admissions) வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மாணவர்களின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட தொகை நாளொன்றுக்கு 250 ரூபாயிலிருந்து இன்றைக்கு 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சீருடைக்கான தொகை ரூபாய் 4 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாகவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து, 2 ஆயிரம் ரூபாயாகவும் நம்முடைய முதலமைச்சர் உயர்த்தி வழங்கியுள்ளார்கள். SDAT விளையாட்டு விடுதிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக இந்த ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகளில் ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த திட்டங்களையெல்லாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நல்ல முறையில் பயிற்சி செய்யுங்கள். விளையாட்டுத்துறையில் நீங்கள் மேற்கொள்கின்ற முயற்சிகள், நிச்சயம் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இங்கே SDAT பயிற்றுநர்கள் (Coaches), மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், SDAT பணியாளர்களும் அதிகளவில் வந்துள்ளீர்கள்.

தமிழ்நாட்டை விளையாட்டுத்துறை தலைநகராக்க வேண்டும் என்ற லட்சியத்தை, உங்களுடைய துணை இல்லாமல் எட்ட முடியாது. அதை உணர்ந்து, அரசு எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்ற உங்களுக்கு என்னுடைய நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நம்முடைய SDAT விடுதி மாணவர்களுக்கு, நீங்கள் தான் தாய், தந்தையராக இருந்து அவர்களுடைய வெற்றிக்கு துணை நிற்கவேண்டும். அவர்களின் கைகளை பற்றிக்கொண்டு, அவர்களை இன்னும் பல உயரங்களுக்கு நாம்தான் அழைத்துச் செல்ல வேண்டும்.

ஏனென்றால் நம் வீரர்கள் பெறுகின்ற வெற்றி அவர்களுடைய தனிப்பட்ட வெற்றியோ, அவர்களின் குடும்பத்திற்கான, ஊருக்கான வெற்றியோ மட்டும் கிடையாது. அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான வெற்றி. ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்துக்கான வெற்றி. உங்களுக்கு நம் திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும். இன்னும் பல திட்டங்களை நம் முதலமைச்சர் தரவுள்ளார்கள். துணை முதலமைச்சராக, விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக மட்டுமல்லாமல் உங்கள் ஒவ்வொருவருடைய வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, உங்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் நான் நிச்சயம் பெற்றுத்தருவேன்.

ஆகவே, இந்த சாம்பியன்ஸ் கிட்-ஐ பெற்றுள்ள உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து விடைபெறுகின்றேன் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலர்கள், பயிற்சியாளர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும் வீரர், வீராங்கனைகளுக்கு “சாம்பியன்ஸ் கிட்” தொகுப்பினை வழங்கினார் துணை முதலமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: