பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது ?
திட்டங்களுக்கு தலைவர் கலைஞர் பெயரை வைக்கிறோமாம். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கலைஞர் பெயரை வைப்பதால் அவருக்கு எங்கே வலிக்கிறது? எதனால் எரிச்சல்ஆகிக் கொண்டிருக்கிறார்? ‘அம்மா’ ஜெயலலிதா ஆட்சி காலத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் பழனிசாமி!
*சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உணவகங்கள் திறக்கப்பட்டு அதற்கு வைக்கப்பட்ட பெயர் அம்மா உணவகம்!
*பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தண்ணீர் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லி கொடுக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலுக்கு வைக்கப்பட்ட பெயர் அம்மா குடிநீர்!
*உப்பு நிறுவனத்தால் தயாரித்து வழங்கப்பட்ட பாக்கெட்டுகளுக்கு வைக்கப்பட்ட பெயர் அம்மா உப்பு!
*ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்ட மருந்தகங்களுக்கு வைக்கப்பட்ட பெயர் அம்மா மருந்தகம்!
*சென்னை மாநகராட்சி சார்பில் கட்ட முயற்சித்த திரையரங்குகளுக்கு வைக்கப்பட்ட பெயர் அம்மா திரையரங்கம்!
*பசுமை நுகர்வோர் காய்கறிக் கடைகளுக்கு வைக்கப்பட்ட பெயர் அம்மா காய்கறிக் கடை!
*சமூக நலத் துறையின் சார்பில் திறக்கப்பட்ட 12 தங்கும் விடுதிகளுக்கு அம்மா தங்கும் விடுதிகள் என்று பெயர்!
*தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை என்ற அமைப்பைத் தொடங்கி, அங்கு உற்பத்தி செய்யப்படும், தரமான சான்று பெற்ற விதைகள் ‘அம்மா விதைகள்” என்ற பெயரில் ‘அம்மா சேவை மையம்’ என்ற அமைப்பின் சார்பில் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
*சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்யப் போகிறோம் என்று சொல்லி ‘அம்மா சிமெண்ட்’ விற்பனைக்கு வந்தது.
*விரைவு பட்டா வழங்கும் திட்டத்துக்கு ‘அம்மா திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.
*அம்மா முகாம்கள் அமைக்கப்பட்டன.
*அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் என்ற ஒரு திட்டம் இருந்தது.
*முழு உடல் பரிசோதனைத் திட்டத்துக்கு அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் என்று பெயர் வைத்திருந்தார்கள்.
*அம்மா ஆரோக்கிய திட்டம் என்ற ஒரு திட்டம் இருந்தது.
*அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டது.
*அம்மா உடற்பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டது.
இவை அனைத்தும் ‘அம்மா’வே முதலமைச்சராக இருந்து ‘அம்மா’வே தனது பெயரில் வைத்துக் கொண்டவை ஆகும். பழனிசாமி அறிக்கைப்படி சொல்வதாக இருந்தால், உதவாத திட்டங்களை அவர் பெயரிலேயே வைத்துக் கொண்டாரா ஜெயலலிதா? பழனிசாமி முதலமைச்சர் ஆனதும், கோட்டைக்கு வந்து முதல் கையெழுத்து போட்டார்.
மகளிருக்கு இரு சக்கர ஊர்தி வாங்க மானியம் வழங்கும் திட்டத்துக்கு ‘அம்மா இருசக்கர வாகனம் திட்டம்’ என்று பெயர் சூட்டியவர் பழனிசாமி. இத்தகைய பழனிசாமிக்கு கலைஞரைப் பற்றி பேச யோக்கியதை இருக்கிறதா?
அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களை நிறுத்திவிட்டோமாம்? எந்த திட்டம் நிறுத்தப்பட்டது என்று சொல்ல வேண்டாமா? ‘அம்மா உணவகத்தை மூடப் போகிறார்கள்’ என்று வதந்தி கிளப்பினார் பழனிசாமி. மூன்று ஆண்டுகளாக அது சிறப்பாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசின் நிதி உதவிகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் உணவு உண்டுதான் வருகிறார்கள். உண்மையான ‘அம்மா பக்தி’ பழனி சாமிக்கு இருக்குமானால் தி.மு.க. அரசை அவர் பாராட்டி இருக்க வேண்டும்.
தாலிக்குத் தங்கம் திட்டத்தை பற்றி திரும்பத் திரும்பச் சொல்வார்கள். அந்தத் திட்டத்தை உருமாற்றியதே அ.தி.மு.க. ஆட்சிதான். தி.மு.க. ஆட்சியில் மூவலூர் மூதாட்டி பெயரிலான திட்டத்தைதான் தங்கம் வழங்கும் திட்டமாக ஜெயலலிதா மாற்றினார். மூவலூர் மூதாட்டி பெயரிலான திருமண நிதி உதவித் திட்டத்தை 1939 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்கள் தொடங்கி ரூ.5 ஆயிரம் நிதி என அறிவித்தார். அ.தி.மு.க. ஆட்சியில் 2002 இல் அந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். அதனை 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர் உயிரூட்டினார். நிதியை அதிகப்படுத்தினார். மீண்டும் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் பணம் தருவதை, தங்கம் தருவதாக மாற்றினார்கள். அதையாவது முறையாகக் கொடுத்துள்ளார்களா என்றால் இல்லை.
2018–21 ஆகிய மூன்று ஆண்டு காலத்தில் இந்தத் திருமண உதவித் திட்டம் உரிய பயனாளிகளுக்கு சென்றடையவில்லை. இந்தத் திட்டத்துக்கான உதவி கேட்டு சுமார் 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தது. திருமணத்தன்று தாலிக்கு தங்கம் கேட்டால் திருமணம் முடிந்து -குழந்தையும் பெற்று குழந்தை பள்ளிக்கு போகும் வரை தங்கம் தராத ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருந்தது.கழக ஆட்சி அமைந்தபிறகு ரூ.762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 94 ஆயிரம் பேருக்கு நிதி உதவியும் தங்கமும் வழங்கப்பட்டது.
அதன்பிறகுதான் இத்திட்டம் இளம்பெண்களின் கல்வி மேம்பாட்டுத் திட்டமாக மேம்படுத்தப்பட்டது. ஏதாவது ஒரு இடத்தில் பச்சை பெயிண்ட் அடித்து அதற்கு ‘அம்மா கிளினிக்’ என்று பெயர் சூட்டியவர்தான் இந்த பழனிசாமி. சென்னை சைதாப்பேட்டை பாரதி நகர் சுடுக்காட்டின் ஒரு பகுதி அம்மா கிளினிக்காக மாற்றப்பட்டது. விருகம்பாக்கத்தில் சுடுகாட்டு காரிய மண்டபத்தில் அம்மா கிளினிக் அமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட பழனிசாமிக்கு அறிக்கைகள் விட யோக்கியதை இல்லை. 1100 என்ற எண்ணுக்கு போன் செய்தால் உங்கள் குறை அனைத்தும் தீரும் என்று தனது பதவிக்காலம் முடியும் போது பழனிசாமி சொன்னார். 1100 எண்ணுக்கு போன் செய்யலாம் என்பது 19.1.2016 அன்று ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டம் . ஜெயலலிதாவின் திட்டத்தை அபகரித்த திருட்டுக் காரியம் செய்த பழனிசாமிக்கு கலைஞரைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. நேற்றைய தினம் விருதுநகர் சென்ற முதலமைச்சர் அவர்கள் அரசு காப்பகத்துக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு கேக், பழங்கள் வழங்கினார். அந்தக் காப்பகத்தின்’ பெயர் ‘அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் என்பதாகும். எம்.ஜி.ஆர். அவர்களின் அன்னை பெயரிலான காப்பகம் அது. அங்கே போய் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களின் பெருந்தன்மையில் துளியாவது பெறுங்கள் பழனிசாமி!
The post “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா பெயரிலேயே திட்டங்கள் தொடங்கப்பட்டன” : எடப்பாடி பழனிசாமிக்கு முரசொலி பதிலடி!! appeared first on Dinakaran.