நகர்ப்புற மக்களைப்போன்று கிராமப்புற ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய வேண்டும்

*விவசாயிகள் கோரிக்கை

திருச்சி : தக்காளி விலை உயர்வால் நகர்ப்புற மக்களை போன்றே கிராமப்புற மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதால் கிராமப்புற ரேஷன் கடைகள் வாயிலாகவும் தக்காளி விற்பனையை அரசு விரிவு படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் ஆண்டுதோறும் தக்காளி, சிறிய வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்வதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வறட்சி, கனமழை, கடுங்குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த காய்கறிகளின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் பிரச்னையாக உருவெடுக்கிறது.

இச்சூழ்நிலைகளை கையாளும் விதமாக தமிழக அரசு வெங்காயம், தக்காளி விலைகள் சீராக இருப்பதற்காக கடந்த மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் வெங்காயத்துக்கு ரூ.29 கோடியிலும், தக்காளிக்கு ரூ.19 கோடியிலும் நிதி ஒதுக்கியது. இதுவரை எந்த அரசும் தன் பட்ஜெட்டில் தக்காளி, வெங்காயத்தின் விலையை சீராக நிர்ணயிப்பதற்காக நிதி ஒதுக்காத நிலையில் கடந்த ஆண்டு தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தமிழக அரசின் அறிவிப்பு நடைமுறைக்கு வரும் முன்னரே எதிர்பாராதவிதமாக நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வை சந்தித்துள்ளது. இருப்பினும் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு ரேஷன் கடைகள், பசுமை பண்ணை அங்காடிகள் மற்றும் உழவர் சந்தைகள் வாயிலாக மலிவு விலையில் தக்காளி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகள் வாயிலாக தக்காளி விற்பனையை நேற்றுமுன்தினம் முதல் அரசு துவங்கியது. தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் சில தினங்களில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கலாம். தக்காளி விலை உயர்வு ஒருபுறம் அரசுக்கும், மக்களுக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை பயன்படுத்தி விவசாயிகளை குழப்பி மிகக் குறைந்த விலைக்கு தக்காளியை கொள்முதல் செய்து செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து தோட்டக்கலை துறை மூலம் தக்காளி கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும். விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன் தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி வட்டத்தை சேர்ந்த சில்லக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். வியாபாரிகள் விவசாயிகளை அணுகி, தக்காளி காயாக இருக்கும்போதே அவற்றுக்கு குறைந்த விலையை நிர்ணயிக்கின்றனர். இவ்வாறு காயாக கொள்முதல் செய்யும் தக்காளிகளை பதுக்கி வைத்து, இந்த அசாதாரண சூழநிலையில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.

தக்காளிவிலை கிலோ ரூ.120க்கு விற்றாலும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.20க்கு மேல் தருவதில்லை. இவற்றுக்கு கொள்முதல் விலையை யார் நிர்ணயிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்நிலையில் அரசு தக்காளிக்கு நியாயமான விலையை நிர்ணயித்து, தோட்டக்கலை துறை வாயிலாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் தக்காளி விலை உயர்வு என்பது நகர்ப்புற மக்களுக்கு மட்டுமல்ல. எளிய கிராமப்புற மக்களுக்குமான ஒரு பொது பிரச்சினை. எனவே அரசு நகர்ப்புறத்தில் ரேஷன் கடைகளில் விலை குறைவாக தக்காளி விற்பனை செய்வது போன்று கிராமப்புற ரேஷன் கடைகள் வாயிலாகவும் தக்காளி விற்பனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

The post நகர்ப்புற மக்களைப்போன்று கிராமப்புற ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: