ரூ.24 கோடியில் மேம்பாட்டு பணிகள்…. புதுப்பொலிவு பெறுகிறது கொடைக்கானல் ஏரி

* இரவில் ஒளிரும் அலங்கார மின்விளக்குகள்
* நடைபாதை பூங்கா, அழகிய புல்வெளிகள்
* நடன நீரூற்று மூலம் தூய்மைப் பணி

கொடைக்கானல்: கொடைக்கானலில் ரூ.24 கோடி செலவில் ஏரியில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இரவில் ஒளிரும் அலங்கார மின்விளக்குகள், நடைபாதை பூங்கா, அழகிய புல்வெளிகள், நடன நீரூற்று என புதுப்பொலி பெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஏரி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கலெக்டர் ஹென்றி லிவின்ச் என்பவரால் உருவாக்கப்பட்டது. 5 கி.மீ சுற்றளவில் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. பழனி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமாரின் முயற்சியால், இந்த ஏரி ரூ.24 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

அலங்கார மின்விளக்குகள்…

ஏரியைச் சுற்றி சாலைகள் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. ஏரியை சுற்றி 5 கி.மீ தூரத்திற்கு நடைபாதை, பூங்கா, அறிவிப்பு பலகைகள் ஆகியவை ரூ.6 கோடி செலவில் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதே போல லேசர் மின்விளக்குகளுடன் கூடிய நடன நீரூற்று, ஆக்சிஜன் செலுத்தும் இயந்திரம், களைச்செடிகள் மற்றும் நீர் தாவரங்களை அகற்றுவதற்குரிய நவீன இயந்திரம், மீன் வளர்ப்பு, மின் விளக்குகள் ஆகியவை ரூ.6 கோடி செலவிலும், ஏரியைச் சுற்றி புல்வெளிகள், அலங்கார வேலிகள் அமைக்க 6 கோடியே 20 லட்சம் செலவிலும், புதிய படகு இல்லம், புதிய படகுகள், மின்விளக்குகள், ஏரியை தூய்மைப்படுத்த பயோ பிளாக் என்ற பவளப்பாறைகள் ஆகியவை அமைக்க ரூ.5 கோடியே 80 லட்சம் ஒதுக்கப்பட்டு இந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏரியைச் சுற்றி 900 மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன.

ஏரியை தூய்மைப்படுத்தும் நடன நீரூற்று…

ஏரியை தூய்மைப்படுத்த முதன் முறையாக நடன நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரூற்றில் வெளிப்படும் கண்ணீர் பார்வைக்கு அழகாக இருப்பினும், ஏரியை தூய்மைப்படுத்தும். அதேபோல ஏரிக்குள் வாழும் உயிரினங்கள் சிறப்பாக பெருகுவதற்கும், மீன் வளர்ப்பதற்கு ஏற்ற வகையிலும் ஆக்சிஜனை ஏரி நீருக்குள் செலுத்த புதிய நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில் ஏரி நீரை தூய்மைப்படுத்த பயோ பிளாக் என்ற பவளப்பாறை முறை சோதனை முறையில் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட உள்ளன.

இது குறித்து கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லதுரை கூறியதாவது: பல ஆண்டுகளாக இந்த ஏரி தூய்மைப்படுத்தப்படாமல் மாசடைந்து வந்தது. பழனி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமாரின் சீரிய முயற்சியால் ரூ.24 கோடியில் தற்போது ஏரி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக புதிய படகு இல்லம் அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக மோட்டார் பொருத்திய ரெஸ்க்யூ போட் ஒன்றும் வாங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன் கொடைக்கானல் ஏரி நன்னீர் ஏரியாக மாறும். ஏரி நீர் தெளிந்த நீராக காட்சி தரும். சுற்றுலா பயணிகள் இதை ரசிக்க உள்ளனர். கொடைக்கானல் ஏரி புது பொலிவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.24 கோடியில் மேம்பாட்டு பணிகள்…. புதுப்பொலிவு பெறுகிறது கொடைக்கானல் ஏரி appeared first on Dinakaran.

Related Stories: