சட்டப்படி கைது செய்வதற்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறைபிடிக்கவில்லை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை விளக்கம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன், சட்ட விரோதமாக சிறை பிடிக்கவில்லை என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்க பிரிவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜியை ஜூன் 14ம் தேதி அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்படும் முன் சட்ட விரோதக் காவலில் வைக்கவில்லை.

ஜூன் 13ம் தேதி நடந்த சோதனையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி அங்கு இருந்தார். அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு என்று அமலாக்கத்துறை மறுத்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக கூறி ஜூன் 13ம் தேதி சம்மன் அளித்தபோது, செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அமலாக்க துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி கைதின்போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எதிர்காலத்தில் அவரை காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

The post சட்டப்படி கைது செய்வதற்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறைபிடிக்கவில்லை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: