கூடலூரில் வெளுத்து வாங்கியது மழை வெள்ளத்தில் சிக்கிய 48 பேர் மீட்பு

கூடலூர்: கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் 48 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் நேற்று முன்தினம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை ஒரு மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை கொட்டியது. இதனால், மாயாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கம்மாத்தி, புத்துர்வயல், இருவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விளைநிலங்கள், வாழைத்தோட்டம், பாக்கு தோட்டம் மற்றும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இருவயல் பகுதியில் 3வது முறையாக வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததையடுத்து அங்கு குடியிருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் தொரப்பள்ளியில் உள்ள அரசு பழங்குடியினர் பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பாடந்துறை பகுதியில் உள்ள சிற்றாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆலவயல் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மச்சுக்கொல்லி மட்டம் முதல் பொலம்பட்டி சாலையில் ஏற்பட்ட மண் சரிவை அப்பகுதியைச் சேர்ந்த எம்ஒய்எஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சீரமைத்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதேபோல், தேவன் 2 பகுதியில் இருந்து கூடலூர் வரும் சாலையில் நெல்லிக்குன்னு பகுதியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அங்கிருந்து காலை நேரத்தில் கூடலூர் நோக்கி புறப்பட்ட பேருந்து பாதி வழியில் நின்றது. இதையடுத்து, அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் சரிந்த மண் திட்டு அகற்றப்பட்டு சுமார் 10 மணியளவில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. நேற்று பகல் நேரத்தில் சற்று குறைந்த இந்த மழை மீண்டும் மாலையில் வேகம் எடுக்க துவங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக நேற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

* ஆற்று வெள்ளத்தை கடந்த யானைகள்
கூடலூரை அடுத்த தொரப்பள்ளி மற்றும் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட தேன்வயல் மற்றும் குனில்வயல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இரண்டு காட்டு யானைகள் புகுந்தன. நேற்று அதிகாலை நேரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த வழியாக ஓடும் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் இறங்கி யானைகள் இரண்டும் ஆற்றை கடந்து வனப்பகுதிக்கு சென்றன.

The post கூடலூரில் வெளுத்து வாங்கியது மழை வெள்ளத்தில் சிக்கிய 48 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: