விஷசாராய மரணம் விவகாரம்; உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர நீதிபதி உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக, மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி அளித்த தொலைக்காட்சி நேர்காணல்கள் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
கல்வராயன் மலைப்பகுதியில் உள்ளவர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் இல்லாததால் அவர்கள் வேறு வழியில்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை உள்ளது. ஆண், பெண் என இருபாலரும் இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய நிலை நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது. விஷச்சாராய மரண சம்பவத்தின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவை இந்த வழக்கு எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாது. இந்த வழக்கு குறித்து, தமிழக தலைமைச் செயலாளர், ஒன்றிய, மாநில பழங்குடியின நலத்துறையின் செயலாளர்கள் தமிழக டி.ஜி.பி. மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் பதில் தர வேண்டும். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி மற்றும் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.

The post விஷசாராய மரணம் விவகாரம்; உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: