3 புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தது தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம்: நீதிமன்ற புறக்கணிப்பு; உண்ணாவிரதம்

சென்னை: நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு நேற்று அமலுக்கு கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்களில் முக்கிய அம்சங்களாக, இனி காவல் நிலையத்துக்கு சென்றுதான் புகார் தர வேண்டும் என்பது இல்லை. மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவே புகார் தர முடியும். எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம். குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கால அவகாசம் 90 நாட்கள். விசாரணையை முடிக்க வேண்டிய நாட்கள் 180. விசாரணை முடிந்த 30 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல பல்வேறு மாநில முதல்வர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் இந்தச் சட்டம் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நேற்று முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மதுரை, நெல்லையில் உண்ணாவிரதம் இருந்த வக்கீல்கள் முன் பாஜ வக்கீல்கள் புதிய சட்டத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதுடன், இனிப்பு வழங்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்த வக்கீல்கள், 4 இடங்களில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் நேற்று வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பல ஊர்களில் ஒரு வாரம் வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். சென்னையில் நேற்று பிற்பகலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகியுள்ளதால் நீதிமன்ற வளாகங்களில் பரபரப்பு நிலவியது. இதனால் வழக்குகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

* கன்னியாகுமரி போலீசில் முதல் வழக்கு பதிவு
புதிய சட்டத்தின்படி நேற்று மாலை வரை குமரி மாவட்டத்தில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் முதல் வழக்கு நேற்று அதிகாலை 12.15க்கு கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ரேஸ் டிரைவிங் (அதி வேகமாக வாகனம் இயக்குதல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பி.என்.எஸ். 281 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 181(3), 185 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி காவல் நிலையத்தில்தான் புதிய சட்டத்திட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 3 புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தது தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம்: நீதிமன்ற புறக்கணிப்பு; உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: