‘4 மாதத்தில் இதுவரை அமைத்தது ஒரு தகர செட் மட்டுமே’ எய்ம்ஸ் கட்டுமானப்பணி வழக்கம்போல ‘கொர்ர்ர்ர்’: எம்பி தேர்தலுக்காக பணிகளை துவக்கியதாக டிராமா; ஒன்றிய அரசின் அலட்சியத்தால் திறப்பு தள்ளிப்போகும்

திருப்பரங்குன்றம்: கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகள் சுற்றுச்சுவரோடு நின்று போனது. மீண்டும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கட்டுமானப்பணிகளை துவக்கியதாக பில்டப் தந்த ஒன்றிய அரசு, ஒரேயொரு தகர செட்டை மட்டுமே அமைத்துள்ளது. இதனால் பணிகள் திட்டமிட்டபடி முடித்து பயன்பாட்டுக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019, ஜனவரி 27ம் தேதி பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்போது, 2023ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் இருந்தது. சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பப்பட்டிருந்தது. பணிகளை துரிதமாக துவங்கி, விரைவில் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் கிளையும் அறிவுறுத்தியிருந்தது. மக்கள், கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த மார்ச் 4ம் தேதி மதுரை எய்ம்ஸில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டதாக கூறி, எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் படங்கள் வெளியானது. மேலும், அடுத்து நடக்கவிருக்கும் பணிகள் குறித்த தகவல்களும் அதில் வெளியிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் பணிகள் வேகமெடுக்கவில்லை.

கடந்த மே 10ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. அதேவேளையில் மே 18ம் தேதி ஒன்றிய அரசு மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவில் உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நியமனம் செய்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் அனுமந்தராவ் 33 மாதங்களில் 900 படுக்கைகளுடன் கூடிய 42 பிளாக்குகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என அறிக்கை வெளியிட்டார். ஆனால், தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கடந்த மார்ச் முதல் தற்போது வரையிலான 4 மாதங்களில், தனியார் கட்டுமான நிறுவனம் எய்ம்ஸ் வளாகத்தில் ஒரு தற்காலிக தகர மேற்கூரை அலுவலகத்தை தவிர வேறு பணிகள் எதையும் துவங்கவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மக்கள் தங்களை நம்ப வேண்டும் என்பதற்காக எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துவக்கியதாக தோற்றத்தை உருவாக்கியது. பின்னர், ஏற்கனவே இருந்த நிலைபோல் தமிழகத்தை ஒதுக்கிவைத்து பணிகளை மந்த கதியில் நடத்துகின்றனர். ஏனெனில் கட்டுமான பணிகள் துவங்கியதாக அறிவிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை ஒரே ஒரு தகர செட் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. வேறு கட்டுமான பணிகள் ஏதும் துவங்கப்படாத நிலையில், ஏற்கனவே கூறியதுபோல் 33 மாதங்களில் பணிகள் முடிவுக்கு வருமா என்பது சந்தேகம்தான்’’ என்றனர்.

* மீண்டும் ராமநாதபுரம் மாணவர்கள் அதிருப்தி
மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி மாதம் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதிக்கு மருத்துவக்கல்லூரியை மாற்ற திட்டமிட்டு, வாடகை கட்டிடத்திற்கு டெண்டர் கோரப்பட்டது. ஆனால், தற்போது அந்த முயற்சியை எய்ம்ஸ் நிர்வாகம் கைவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மீண்டும் ராமநாதபுரத்திலேயே கல்வியை தொடர ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மதுரைக்கு மாற்றப்பட உள்ளதாக கிடைத்த தகவலால் உற்சாகமடைந்த மாணவர்கள், தற்போது மீண்டும் ராமநாதபுரத்திலேயே வகுப்புகளை தொடர உத்தரவிட்டுள்ளதால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

The post ‘4 மாதத்தில் இதுவரை அமைத்தது ஒரு தகர செட் மட்டுமே’ எய்ம்ஸ் கட்டுமானப்பணி வழக்கம்போல ‘கொர்ர்ர்ர்’: எம்பி தேர்தலுக்காக பணிகளை துவக்கியதாக டிராமா; ஒன்றிய அரசின் அலட்சியத்தால் திறப்பு தள்ளிப்போகும் appeared first on Dinakaran.

Related Stories: