ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 650 பேர் தேர்ச்சி பெற்று சாதனை

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 650 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். மெயின் தேர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1056 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த பிப்ரவரி 14ம் தேதி அறிவித்தது. இத்தேர்வை இந்தியா முழுவதும் 6 லட்சம் பேரும், குறிப்பாக தமிழகத்தில் 25 ஆயிரம் பேரும் எழுதினர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மாதம் 16ம் தேதி நடந்தது. இந்நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் www.upsc.gov.in, www.upsconline.nic.inல் ஆகிய இணையதளத்தில் நேற்று வெளியானது.

இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறுகையில், சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 14,627 பேர், குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் அகாடமியில் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், டெல்லியில் பயின்ற 954 பேர் தேர்ச்சி பெற்றதில், தமிழகத்தில் மட்டும் 396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தகட்டமாக மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடக்கிறது என்றார்.

கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் 16 நாட்களில் வெளியிடப்பட்டது. இந்தாண்டு 14 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல்நிலை தேர்வில் தமிழகத்தில் 700 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 650 பேர் தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.

Related Stories: