ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல்

சென்னை: ரயில் ஓட்டுனர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும், என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
தென்சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் டெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தெற்கு ரயில்வேயால் 29 லோகோ பைலட்டுகள் மற்றும் உதவி லோகோ பைலட்டுகள் இடைநீக்கம் செய்யபப்பட்டது தொடர்பான பிரச்னைகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். மேலும் பலர் மீது ஓய்வு எடுத்ததற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லோகோ பைலட்டுகள், போதிய ஓய்வு இல்லாமல் நீண்ட நேரம் பணிபுரிவதால், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

தொழிலாளர் அமைச்சகம் மற்றும் கோர்ட்டு உத்தரவின்படி லோகோ பைலட்டுகளுக்கு தலைமையிடத்து ஓய்வு, குறிப்பிட்ட கால ஓய்வு என இரு வகையாக 46 மணி நேர ஓய்வு அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் ஓய்வு எடுக்கப்படும்போதெல்லாம் தலைமையிடத்து ஓய்வு கழிக்கப்படுவதால் பிரச்னை உருவாகிறது. இந்த இருவகை ஓய்வுகளும் ஒன்றுக்கொன்று சார்புடையாதா, இல்லையா, என்பதில் தெளிவு இல்லை.

அவர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னை கழிவறை வசதி, அவர்கள் தொடர்ந்து 9 மணி மற்றும் அதற்கு மேலும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இன்ஜின் அறைகளில் குளிரூட்டமும், கழிவறை வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்று 2016ம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரெயில்வேக்கு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, லோகோ பைலட்டுகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும், அவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதற்கும் உரிய முடிவுகளை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளார். இந்த சந்திப்பின்போது பெரம்பலூர் தொகுதி எம்.பி. அருண் நேரு உடன் இருந்தார்.

The post ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: