சென்னை மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் பணிக்கு நாளை நேர்காணல்

சென்னை: சென்னை மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு/ கிராம ஆயுள் காப்பீடு விற்பனை மேற்கொள்ளும் முகவர் பணிக்கு நாளை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்த உள்ளனர். எனவே விருப்பமுள்ளவர்கள் சென்னை தி.நகர் சிவஞானம் சாலையில் உள்ள அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்பவர்கள் குறைந்தது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக சுய தொழில் செய்பவர்கள், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள், சொந்த பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளலாம். மேலும் இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ₹5,000க்கு தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எஸ்.சி) அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (கே.வி.பி) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும். இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post சென்னை மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் பணிக்கு நாளை நேர்காணல் appeared first on Dinakaran.

Related Stories: