சோதனையின்போது துணை ராணுவத்தை குவித்தது ஏன்? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எந்த துறையும் விலக்கல்ல: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: சோதனையின்போது துணை ராணுவத்தை குவித்தது ஏன்? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எந்த துறையும் விலக்கல்ல என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.  புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எந்த துறையும் விதி விலக்கல்ல. யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு தற்போது நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. யார் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் கையும் களவுமாக பிடிபடும் போது சட்டத்தின் முன் நிறுத்துவது கடமை. இதில் தமிழ்நாடு முதலமைச்சருடைய அரசு துணிச்சலோடு செயல்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மீது தொடர்ந்து இதுபோன்ற தகவல் கிடைத்தால் அங்கு சென்று லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.

அமலாக்க துறையை வைத்து அல்லது வேறு யாரை வைத்து மிரட்டினாலும், எந்த மிரட்டலுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருடைய அரசு பணியாது, அஞ்சாது. யாரைக்கண்டும் அஞ்சுகின்ற இயக்கம் திமுக கிடையாது. சபாநாயகர் அப்பாவு தைரியமானவர். அவருக்கு வந்த மிரட்டலை அவர் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டுமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையே தொடர வேண்டுமா என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு செய்வார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும்போது ஏன் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை (துணை ராணுவம்) அங்கு குவிக்க வேண்டும். ஒரு அறையில் மட்டும் ஏன் அவர்கள் சென்று பார்க்க வேண்டும்.

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இருக்கக்கூடாது. லஞ்ச ஒழிப்புத்துறை வந்த உடனே எதுவும் இல்லை என்றால் சோதனை நடத்திக்கொள்ளட்டும் என்று அவர்கள் விட்டிருக்க வேண்டியது தானே. பாஜ கூட்டணி கட்சிகளில் அமலாக்கத்துறையும் ஒன்று என்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ச்சியாக கூறி வந்தார். அமலாக்கத்துறை பாஜவின் கூட்டணி கட்சி தான். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் திரும்பி அனுப்பியுள்ளார். அவர், என்ன காரணத்திற்காக திருப்பி அனுப்பினாரோ அதற்கான விளக்கங்களோடு மீண்டும் திருப்பி அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post சோதனையின்போது துணை ராணுவத்தை குவித்தது ஏன்? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எந்த துறையும் விலக்கல்ல: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: