கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை காண லேசர் தொழில்நுட்ப காட்சி கூட பணி: கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில்: கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில், கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை காண அமைக்கப்பட்டு வரும் ஒலி மற்றும் ஒளி காட்சி கூட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் ஒளிரும் லேசர் தொழில்நுட்ப திட்டம் செயல்படுத்த ₹11.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகம் அருகில் உள்ள ஒலி மற்றும் ஒளி காட்சி கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் அமர்ந்து திரையில் திருவள்ளுவர் சிலையில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் விளக்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்.

இக்காட்சி கூடத்தில் 200 பேர் அமரலாம். தற்போது தள உபகரணங்களை நிறுவும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிவடையும். இத்திட்டம் திருவள்ளுவர் சிலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தனித்துவமான மற்றும் அதிவேக அனுபவத்தையும், தொழில்நுட்பம் மற்றும் கலாசார பாரம்பரியத்தையும் ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை காண லேசர் தொழில்நுட்ப காட்சி கூட பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: