கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த இருவரும், சேலத்தில் இருவரும் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் சிகிச்சையில் இருந்தவர்களில் 46 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனார்கள். கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் செவ்வாய்க்கிழமை வரை 59 பேர் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை காலையில் கருணாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதேபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராமநாதன் (62), ஏசுதாஸ் (35) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி 62 ஆக அதிகரித்தது. புதன்கிழமை மாலை சேலத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்தது. புதன்கிழமை மதியம் வரை அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் 28 பேர் மட்டும் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர்.

இந்த நிலையில், மதியத்துக்கு மேல் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து அதிகளவாக 43 பேர் வீடு திரும்பினர். இதுவரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து 63 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் இருந்து 6 பேரும், விழுப்புரத்தில் இருந்து இருவரும், தனியார் மருத்துவமனையில் இருந்து இருவரும், சேலத்தில் இருந்து ஒருவரும் என மொத்தமாக 74 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் 47, சேலத்தில் 29, விழுப்புரத்தில் 2, புதுச்சேரி ஜிப்மரில் 9, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 88 பேர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: